சாவகச்சேரி, பருத்தித்துறையில் தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைப்பதைக் கூட்டமைப்பு குழப்பாது!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரி, பருத்தித்துறையில் தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைப்பதைக் கூட்டமைப்பு குழப்பாது!

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபைகள் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை என்பவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டமைப்பு மோதுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சி ஆட்சியமைக்க வேண்டும். அதனை ஏனைய கட்சிகள் குழப்புவதில்லை என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஏனைய கட்சிகள் அதிலிருந்து நழுவியிருந்தாலும், நாம் எமது கொள்கையில் உறுதியாக இருப்பது என்று முடிவு செய்துள்ளோம். மக்கள் ஏனைய கட்சிகளின் பொறுப்புணர்வைத் தெரிந்துகொள்ளட்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைப் பெற்ற யாழ். மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை, கரவெட்டி பிரதேசசபை ஆகியவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்ற பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. அதேபோன்று ஈ.பி.டி.பி கூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கும் சுயேச்சைக் குழு, கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளில் குழப்ப நிலை தோன்றலாம் என்று எதிர்வுகூறப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது என்றும், ஏனைய கட்சிகள் அதனைக் குழப்பக் கூடாது என்றும் பொது அமைப்புக்கள் முன்வைத்த கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுத் தீர்மானித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு