ஏழாலையில் தனித்திருந்த குடும்பப் பெண்ணுக்கு நடந்தது இதுதான்!_ ஒரு நேரடி ரிப்போர்ட் VIDEO

ஆசிரியர் - Admin
ஏழாலையில் தனித்திருந்த குடும்பப் பெண்ணுக்கு நடந்தது இதுதான்!_ ஒரு நேரடி ரிப்போர்ட் VIDEO

யாழ். ஏழாலையில்  தனித்திருந்த குடும்பப் பெண் வீட்டுக் கிணற்றிலிருந்து  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(20) இரவு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் ஏழாலை முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்கு கல்விச் சுற்றுலா அனுப்பிவிட்டு குறித்த குடும்பப் பெண் மாத்திரம் தனிமையில் வீட்டில் இருந்துள்ள நிலையிலேயே இந்தத் துயரமான சம்பவம் பதிவாகியிருந்தது.  இந்நிலையில்மேற்படி குடும்பப் பெண்ணின் மரணம் மர்மமாகவே இருந்து வந்ததுடன் அவரது மரணம் தொடர்பில் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் சந்தேகமும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் எமது செய்திச் சேவை கடந்த இரு நாட்களாக காணொளிகளுடன் வெளியிட்டிருந்த செய்திகள் தாயக மக்களை மாத்திரமன்றி புலம்பெயர் தேச மக்களையும் சென்றடைந்ததுடன் பலர் மத்தியில் முக்கிய பேசுபொருளாகவும் மாறியிருந்தது.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியை எமது செய்தியாளர் நேரில் ஆராய்ந்து பார்த்த போது உண்மையில் நடந்தது என்ன? என்பது வெளிப்பட்டுள்ளது. பொறுப்புள்ளதொரு ஊடகமென்ற வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் எமது செய்தியாளரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிடுகின்றோம்.

மரணமான குடும்பப் பெண்ணின் கணவரான முருகையா பாலகிருஷ்ணன் இன்றைய தினம்(22) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட கருத்துக்கள் வருமாறு,


எனது மனைவி மணிக்கூட்டில் எலாம் வைத்துத் தினமும் அதிகாலை -05 மணிக்கு நித்திரையால் எழும்புவா. முதலில் கேற்றில சுடுதண்ணீர் கொதிக்க வைத்து தேத்தண்ணி குடிச்சிற்று அதிகாலை-05.30 மணிக்கு முற்றத்தைக் கூட்டிப் பெருக்குவதை வழமையாகக் கொண்டுள்ளார்.

மனைவி முற்றம் கூட்டி முடிந்த பின்னர் தான் நான் பல் தீட்டி முகம் கழுவுவது வழமை. அதன் பின்னர் தான் நான் பால் கறந்து நேரடியாகச் சென்று விற்பனை செய்துவிட்டு எனது வழமையான செயற்பாடுகளில் ஈடுபடுவேன்.

இந்த நிலையில் எனது மனைவி வழமையாக முற்றம் கூட்டிவிட்டுக் கிணற்றடிக்குச் சென்று கைகழுவுவதை நாளாந்த நடவடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்  நிலையில் அவர் கைகழுவும் போது குளிருக்காக அணிந்த மேலங்கியைக் கழற்றித் தனது தோளில் போட்டுள்ளார். இந்நிலையில் கிணற்று வாளியை எடுத்து கிணற்றுக்குள் விடும் போது குளிருக்காக அணிந்திருந்த மேலங்கி கிணற்றினுள் விழுந்துள்ளது. இதன் போது குறித்த மேலங்கியை மற்றைய கையால் ஏந்த முற்பட்ட போது நிலைதடுமாறிக் கிணற்றினுள் விழுந்துள்ளார். அவரது நெற்றியில் காணப்பட்ட வீக்கமும், சம்பவம் இடம்பெற்ற கிணற்றடியின் சூழமைவுகளும் இவ்வாறு நடைபெற அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதையே உணர்த்துகின்றன. சுன்னாகம் பொலிஸாரினது விசாரணை முடிவுகளும் இவ்வாறானதாகவேயுள்ளது.

எனது மனைவிக்கு அண்மைக்காலமாக தலைச்சுற்றலுடன் மயக்கம் வாறதாம். ஆனால், அந்த விடயத்தை எனது மனைவி என்னிடமிருந்து மறைத்துள்ளார். எனக்கு குளிசை குடிப்பது பிடிக்காத காரணத்தால் அந்த வருத்தமிருப்பதை அவா எனக்கு மறைத்துள்ளார். பொலிஸ் விசாரணைகள் மூலமே இந்தவிடயம் எனக்குத் தெரியவந்துள்ளது. இவ்வாறான காரணத்தால் ஒருவேளை திடீர் மயக்கம் வந்தமையால் அவா கிணற்றில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகமுமுள்ளது என்றார்.

மேலும், உயிரிழந்த மேற்படி குடும்பப் பெண்ணுக்கு நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது சந்தேகத்துக்கிடமான எந்தவொரு தடயங்களும் காணப்படவில்லை.

குறித்த பெண் தற்கொலை செய்வதற்கான எந்தவொரு குடும்பக் காரணிகளும் இல்லை என்பது அவரது கணவர் மற்றும் உறவினருடனான உரையாடல்களின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்தமைக்கான எந்தவொரு சான்றுகளும் உடற்கூற்றுப் பரிசோதனையின் போது வெளிப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் குறித்த வீட்டில் கொள்ளை நடைபெற்றமைக்கான எந்தவொரு சான்றுகளுமில்லை. ஒருவேளை யாராவது குறித்த குடும்பப் பெண்மணி ஏதோவொரு காரணத்துக்காகத் தொடுவதற்கு அல்லது தாக்குவதற்கு வந்தால் அவர்களுடன் துணிவுடன் எதிர்த்துப் போராடும் தைரியம் அவருக்கு நிறையவே உள்ளதாக அவரது கணவரும், உறவினர்களும், அயலவர்களும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு யாராவது ஒருவேளை வந்திருந்தால் கூட வந்தமைக்கான எந்தவொரு ஆதாரங்களுமில்லை.

எனவே,  உயிரிழந்த குடும்பப் பெண்ணின் கணவர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், பொலிஸாரின் விசாரணையின் அடிப்படையிலும் கிணற்றினுள் தவறிவிழுந்த குளிருக்காக அணியும்  தனது மேலங்கியை மற்றைய கையால் ஏந்த முற்பட்ட போதே கிணற்றினுள் விழுந்து உயிரிழந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களின் கருத்துக்களும் இவ்வாறு நடந்திருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.

கிணற்றினுள் உயிரிழந்த நிலையில் குறித்த குடும்பப் பெண்ணின் சடலம் மிதந்த போது சடலத்திற்கு அருகே அவர் குளிருக்காக அணிந்திருந்த மேலங்கி மிதந்த நிலையிலிருந்தமையும் இவ்வாறு நடந்திருப்பதற்கான ஏதுநிலைகளை வெளிப்படுத்துபவையாகவேயுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு