ஏழாலை கிணற்றில் குடும்பப் பெண்ணின் சடலம்_ நேரில் கண்ட உறவுப் பெண்ணின் திகில் அனுபவம்! VIDEO

ஆசிரியர் - Admin
ஏழாலை கிணற்றில் குடும்பப் பெண்ணின் சடலம்_ நேரில் கண்ட உறவுப் பெண்ணின் திகில் அனுபவம்! VIDEO

யாழ். ஏழாலை மத்திப் பகுதியில் தனித்திருந்த குடும்பப் பெண் வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகளை கணவனுடன் நுவரெலியாவிற்கு கல்விச் சுற்றுலா அனுப்பிவிட்டு குறித்த குடும்பப் பெண் மாத்திரம் தனிமையில் வீட்டில் இருந்துள்ள நிலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பில் எமது செய்திச் சேவை நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தமையும் பலரும் அறிந்ததே.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள், அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த குடும்பப் பெண் கிணற்றினுள் சடலமாக மிதப்பதை முதன்முறையாக நேரில் கண்ட உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான இளம் குடும்பப் பெண் சோகமே உருவாக எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக திகில் அனுபவங்களை  எழுத்து வடிவிலும், காணொளி வடிவிலும் உங்களுக்காகத் தருகின்றோம்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, நான் ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாசாலையிலிருந்து எனது சிறுவயது மகனைத் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வரேக்க அன்ராவைப் பார்த்துவிட்டுச் செல்வோம் என அவர் தெரிவித்ததற்கமைய வீட்டிற்கு வருகை தந்தோம்.

வீடு வருகை தந்து பார்த்த போது வீட்டுக் கேற் உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்திச்சு. அப்போது கூப்பிட்டுப் பார்க்க எந்தப் பதிலும் வராத காரணத்தால மதில் கட்டிய இடைவெளி சைற்றால உள்ளுக்கு வந்து பார்த்தேன். உள்ளுக்கு வந்து கூப்பிட்டுப் பார்த்த போதும் சத்தத்தைக் காணேல. வெளியால அவான்ர சைக்கிள் நின்றுச்சு.

அதன் பின்னர் போன் பண்ணிப் பார்க்கேக்க போன் உள்ளே ரிங் ஆகுது. அப்ப என்ர மகன் அம்மா...போன் உள்ளுக்க தானிருக்கு என்று கூறினார்.

குசினிக் கதவைப் பார்த்த போது ஒரு இஞ்சி அங்குலத்தில திறந்தபடி உள்ளுக்கே திறப்பு இருந்தபடியே இருக்கிறது. அப்ப என்ர மகனை வெளியில நிற்கச் சொல்லிட்டு நான் பயத்துடன் வீட்டினுள் சென்று பார்த்தேன்.

அன்ரா தான் தனியாக இருந்தாலும் கதவைப் பூட்டிற்றுத் தானிருப்பா...இந்த நிலையில் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாகப் போய்ப் பார்வையிட்டேன்.

அப்போது அயலிலுள்ள பெண்ணொருவருக்கு கோல் பண்ணிப் பார்த்தேன். வந்தவாவோ எனக் கேட்டுப் பார்த்தேன். அதற்கு வரவில்லை என அவா பதில் சொன்னதுடன் நீ வீட்டு வளவை ஒருக்காப் பார் என்றும் சொன்னா.

வளவைப் பார்க்கலாம் என்று பார்த்திற்றுக் கிணற்றை எட்டிப் பார்க்கேக்க...கிணற்றினுள் ஏதோ மிதந்து கொண்டு இருந்திச்சு. பக்கத்தில சீலை மாதிரி ஏதோ இருந்திச்சு. பிறகு குனிஞ்சு பார்த்தால் அன்ரா இறந்த நிலையில் கிணற்று நீரில் மிதந்தபடி இருந்தா. மிதந்தபடி அவான்ர முதுகுப் பக்கம் தான் தெரிஞ்சுது. தலதெரியேல. எங்களுக்கு இந்த மரணம் மர்மமாகத் தானிருக்கு! எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் தாயார் மிகுந்த கவலையுடனும், கண்ணீருடனும் எமது செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள பிரத்தியேகக் கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் (வீடியோ) காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு