SuperTopAds

கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தைப் பிரதமர் பார்வையிட்டார்..!

ஆசிரியர் - Admin
கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தைப் பிரதமர் பார்வையிட்டார்..!

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றிணைந்து கொழும்புப் பகுதியில் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாக கொலன்னாவை கால்வாயினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் 

முன்னேற்றத்தை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.06.25) முற்பகல் வேளையில் அத்திட்டம் செயற்படுத்தப்படும் கொலன்னாவையைச் சூழவுள்ள பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, பிரதம அமைச்சர் அவர்கள் நாகலகம் வீதியில் நிர்மாணிக்கப்படும் நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டதுடன், அதன் பின்பு நீரேற்று நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக அந்தக் கருத்திட்டத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் ஏ.எச். துஷாரி 

கருத்திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார். இந்த கருத்திட்டத்திற்கு ஏற்புடையவாறு மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான மேலும் சில கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டார்.

நீரேற்று நிலையத்தை நிர்மாணிக்கும்போது நீரின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்த வேளை அந்தக் கால்வாயில் குப்பை கூழங்கள் இடப்படுகின்றமையினால் நீர் அசுத்தமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஏ.எச்.துஷாரி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த திட்டத்தின் இன்னொரு கட்டமாக செயற்படுத்தப்படும் கொலன்னாவை கால்வாய் களனி கங்கையுடன் இணையும் இடமான கறுப்பு பாலம் அருகில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (விசேட கருத்திட்டப் பிரிவு) ஆர்.எம்.டீ. ரத்நாயக்க இந்தக் கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக 

பிரதமருக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தினார். கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை 1400 மில்லியன் ரூபாய் ஆகும். இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இந்தக் கருத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. 

கருத்திட்டம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்யப்பட வேண்டியிருப்பினும், கொவிட் - 19 தொற்று நிலைமை காரணமாக இதன் அபிவிருத்திப் பணிகள் சற்று தாமதமடைந்துள்ளன. தற்போது இக்கருத்திட்டத்தின் 72% நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 

இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, அம்பத்தலே சேதவத்த பாலம் இந்தக் கால்வாயின் நீர் வடிந்து செல்வதற்குத் தடையாக உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதுடன், 

இதன்போது கொலன்னாவை கால்வாயின் கொள்திறன் 4 கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்படுகிறது.  மழை நீர் மற்றும் களனி கங்கையின் மேல் நீர் போசிப்புப் பிரதேசங்களில் மழை பெய்கின்றமை காரணமாக 

கொலன்னாவை பிரதேச மக்களுக்கு ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் குறைப்பது கொலன்னாவை கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், RDC(Resource Development Cooperation) நிறுவனம் 

இக்கருத்திட்டத்தின் ஆலோசனை நிறுவனமாக செயற்படுகிறது. அதன்  பின்பு வெல்லம்பிட்டி பாலம், துப்பாவில கால்வாய், செலலிஹினி மாவத்தை அருகிலுள்ள கால்வாய் ஆகிய இடங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.

இதன்போது, செலலிஹினி மாவத்தை அருகிலுள்ள கால்வாயினைப் பார்வையிட்ட பிரதமர் , கால்வாயின் இரண்டு பக்கங்களையும் அபிவிருத்தி செய்து மக்களுக்கு நடமாடும் நடைபாதையொன்றை அமைக்குமாறும், 

அப்பிரதேசத்தில் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணிகளில் மரங்களை நடுமாறும், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை அப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளுக்கு வழங்குமாறும் பிரதம அமைச்சர் அவர்கள் தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபையின் தலைவருக்கு மேலும் அறிவுறுத்தல் வழங்கினார்.

நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியன் பந்து விக்கிரம, தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் எம்.ஆர். த சொய்ஸா, தாழ் நிலங்கள் அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் சிறீமதி சேனாதீர, 

கருத்திட்டத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அமில பெரேரா ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டனர்.