யாழ்.கந்தரோடையில் வாள்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சி..! அயலவர்கள் கூடியதால் தப்பி ஓட்டம், ஆடிப்பாடி வந்த பொலிஸார்..
யாழ்.கந்தரோடை - மடத்தடி பகுதியில் வாள்களுடன் முகத்தை மறைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டை உடைத்து கொள்ளையிட முயன்றபோதும் வீட்டு உரிமையாளரின் கடுமையான எதிர்ப்பையடுத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது,
வீட்டின் குடும்பத் தலைவி வேலைக்குச் சென்ற நிலையில் குடும்பத் தலைவனான இளம் குடும்பஸ்தரும் சிறுபிள்ளைகளும் வீட்டில் உறக்கத்திலிருந்த சமயம் நேற்று அதிகாலை 02 மணியளவில் திருட்டுக் கும்பல் மதில் பாய்ந்து வீட்டு வளவிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு விழித்தெழுந்த குடும்பத் தலைவர் திருட்டுக் கும்பல் வந்துள்ளமையை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் குறித்த திருட்டுக்கு கும்பல் வீட்டு வளவினுள்ளிருந்த மண்வெட்டி மற்றும் தம்முடன் எடுத்து வந்த வாள்களால்
வீட்டின் முன்கதவை உடைத்துள்ளது. முன்கதவின் மேற்பகுதி திருடர்களால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியால் திருடர்கள் வீட்டினுள் செல்ல முற்பட்டனர். எனினும், கதவின் மேற்தடுப்பை வீட்டினுள் நின்ற இளம் குடும்பஸ்தர் தனது கையில் எடுத்து வைத்தவாறு
உள்ளே வந்தால் அடிவிழுமெனத் திருடர்களை எச்சரித்துள்ளார். இதனையடுத்துக் கதவின் கீழ்ப் பகுதியும் கொள்ளையர்களால் உடைக்கப்பட்டுள்ளது. எனினும், திருடர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு கதவின் கீழ் தடுப்பைக் குடுமபஸ்தர் தனது காலால் அழுத்தியும்
சில நிமிடங்கள் வரை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பக்கத்தில் வாகனத் திருத்தங்களுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புகளாலும், அங்கு வைக்கப்பட்டிருந்த கதிரையாலும் குறித்த திருட்டுக் கும்பல் உடைக்கப்பட்ட கதவு வழியாக
வீட்டினுள் நின்றவர்கள் மீது எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. சம்பவத்தில் வீட்டினுள் நின்ற இளம் குடும்பஸ்தர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்.வீட்டினுள் நின்றவர்கள் எழுப்பிய அவலக் குரலையடுத்து அயலவர்கள் அப்பகுதியை நோக்கி விரைந்துள்ளனர்.
எனினும், அதற்குள் குறித்த திருட்டுக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.
காலை-07.30 மணியளவில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்த பின்னரே சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டனர். திருடர்கள் வந்தமைக்கான தடயங்கள் மேற்படி வீட்டில் காணப்படும் நிலையில்
தடயவியல் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.