சஹ்ரானை இந்தியாவுக்கு அனுப்பிய ரிஷாட் பதியுதீனின் சகோதரர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதீயுதீன் வள்ளம் ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே இது தொடர்பான தகவல்கள் அம்பலமாகின.
சஹ்ரான் ஹாசிமின் இனவாத அமைப்புடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் நெருங்கி செயற்பட்டுள்ளதாக முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஒருவர் ஆணைக்குழு முன் வழங்கிய சாட்சியின் மூலம் தெரிய வந்தது. புலனாய்வு தகவலை இனம் காண்பது தொடர்பாக அவர் நீண்ட நேரம் விளக்கமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் இந்த முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சாட்சியம் அளித்துள்ளார்.
தனக்கு எவ்வித்திலேனும் கிடைக்கின்ற தகவல்கள் புலனாய்வு துறை தகவலாக இனம் காண்பதற்கு 6 பரிந்துரைகள் பயன்படுத்தப்படுவதாகவும் இங்கு தெரிவித்தார்.
இதற்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னைய தகவல்களை உள்ளடக்கி பாதுகாப்பு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் பரிமாறி கொள்ளப்பட்டிருந்த, அத்துடன் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 2 கடித ஆவணங்கள் முன்னாள் புலனாய்வு துறை பணிப்பாளரிடம் காண்பிக்கப்பட்டு அவை புலனாய்வு தகவல்களாக இனம் காணப்படமுடியுமா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.
அவர் குறிப்பட்ட 6 அடிப்படைகளின் கீழ் புலனாய்வு தகவலாக இனம் காணப்படக்கூடிய விதத்தை விரிவாக விளக்கினார். அத்துடன் இவ்வாறான தகவல் மிகவும் அரிதாகவே கிடைப்பதாகவும் தமது சேவைக்காலத்திற்குள் இவ்வாறு தெளிவான முழுமையான தகவல்கள் அடங்கிய கடிதங்கள் ஒன்றோ அல்லது 2 தடவைகள் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சஹ்ரான் ஹாசிம் தொடர்பாக தமது புலனாய்வு பிரிவினால் 9 சந்தர்ப்பங்களில் சஹ்ரானின் இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து தேசிய புலனாய்வு பொறுப்பாளர் சிசிர மெண்டிஸ் மற்றும் அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் அறிவுறுத்தப்பட்டதாகவும் இவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மேலும் விளக்கமளித்தார்.