முகமாலையில் துப்பாக்கிச் சூடு குறித்து இராணுவத் தளபதி மௌனம்!
முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து இப்போது எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகமாலையில் கடந்த சனிக்கிழமை மாலை இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடைய குறித்த இளைஞன், இராணுவத்தினரை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே, சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம்.சார்ள்ஸ், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி இந்தச் சம்பவம் குறித்து இப்போது எந்த தகவலையும் வெளியிட முடியாது எனக் கூறியுள்ளார்.
முகமாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரின் விசாரணையும் பொலிஸ் தரப்பின் விசாரணையும் நடந்து வருவதாகவும், எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் இப்போது எதுவுமே கூற முடியாது என்றும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.