SuperTopAds

அமெரிக்கா கொலை விவகாரம்!! -4 போலீஸார் மீதும் வழக்கு-

ஆசிரியர் - Editor III
அமெரிக்கா கொலை விவகாரம்!! -4 போலீஸார் மீதும் வழக்கு-

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்படும் வகையில் அக் கொலையுடன் தொடர்புடைய தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னசோட்டா மாகாண அட்டார்னி ஜெனரல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

நேரடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி டெரக் சயூவின்மீது முதலில் சுமத்தப்பட்ட 3-ம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடரும். மேலும் அவர் மீது 2-ம் நிலை குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட எஞ்சிய 3 போலீஸ் அதிகாரிகளான தாமஸ்லேன், அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக (2-ம் நிலை குற்றத்துக்கு) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 2-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.

இந்த திருப்பத்தை ஜார்ஜ் பிளாய்டு குடும்ப வக்கீல் பெஞ்சமின் கிரும்ப் வரவேற்றுள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இது நீதிக்கான பாதையில் குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை. ஜார்ஜ் பிளாய்ட் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறினார்.

இதனால் நாடு முழுவதும் நடந்து வருகிற கருப்பு இன மக்களின் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று வெளியானது.

இதையொட்டி தலைமை மருத்துவ பரிசோதனையாளர் டாக்டர் ஆண்ட்ரூ பேக்கர் கூறுகையில், “ஜார்ஜ் பிளாய்டுக்கு மரணத்துக்கு பிந்தைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்து. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

ஜார்ஜ் பிளாய்டு மறைவையொட்டி, மின்னசோட்டா, டெக்சாஸ், வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் நினைவு பிரார்த்தனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.