இலங்கைக்குள் நுழைந்த 35 சீஷெல்ஸ் நாட்டவர்கள்..! அச்சத்தில் மக்கள், பொய்களை கூறி மூடிமறைக்க அரசு தீவிர முயற்சி..
சிஷெல்ஸ் நாட்டிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதாக கூறி அரசாங்கம் அழைத்துவந்த 35 பேரும் இலங்கையர்கள் அல்ல. அவர்கள் சீஷெல்ஸ் நாட்டு பிரஜைகள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கொரோனா தொற்று அபாயம் காரணமாக இலங்கை வர முடியாதிருந்த 35 இலங்கை பிரஜைகளை சீஷெல்ஸ் நாட்டிலிருந்து, கடந்த 23 ஆம் திகதி விசேட விமானத்தின் மூலம் அழைத்து வந்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இவ்வாறு சீஷெல்ஸ் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல, 35 சீஷெல்ஸ் பிரஜைகளை இலங்கையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு அந்நாடு,
இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிகைக்கு அமைவாகவே சீஷெல்ஸ் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னதாக பங்களாதேஷ் நாட்டிலிருந்து 276 இலங்கைப் பிரஜைகளும், 35 சீஷெல்ஸ் நாட்டுப் பிரஜைகளுமாக 311 பேர் கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பங்களாதேஷ் நாட்டிற்கு கல்வி நடவடிக்கைக்காகச் சென்ற மாணவர்களும் மற்றும் தொழில் நடவடிக்கைக்குச் சென்றவர்களுமாக 276 இலங்கைப் பிரஜைகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் விஷேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவும் நிலையிலும் இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இருந்த போதும்
இவ்வாறு இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக தற்போது அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் எனவும்
சுகாதார அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், சீஷெல்சிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வைத்திய பரிசோதனைக்காக என்று கூறப்பட்டு வந்துள்ள 35 சீஷெல்ஸ் பிரஜைகள் குறித்து பல்வேறு அச்சமும்
சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.