3 பெண்கள் மரணம், 4 பேர் கவலைக்கிடம், 5 பேர் படுகாயம், 6 பேர் கைது..! பொலிஸார் வெளியிட்ட மனதை உருக்கும் பின்னணி..
ஏழை மக்களுக்கு பண உதவி வழங்குவதற்காக ஒழுக்கமைக்கப்பட்ட நிகழ்வில் பணம் பெற்றவர்கள் மீளவும் பணம் பெறுவதற்காக ஒரே இடத்தில் நின்றமையே நொிசல் ஏற்பட்டு 3 பேர் இறப்பதற்கு காரணமாக அமைந்தது.
என இன்று பிற்பல் மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தொியவந்திருக்கின்றது. இதில் மேலும் தொியவந்திருப்பதாவது,
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பு 10, மாளிகாவத்தை, ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பெண்களுக்கு மேலதிகமாக 9 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதுடன் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும்
அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் லயனல் முஹந்திரம் கூறினார். இவ்வாறு காயமடைந்த 9 பேரில்
7 பேர் பெண்கள் எனவும் ஏனைய இருவரும் ஆணகள் எனவும் அவர் கூறினார்.கொழும்பு 10 - மாளிகாவத்தை லக்சித்த உயன தொடர்மாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய உமா அகிலா,
ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தையைச் சேர்ந்த 59 வயதுடைய பளசியா நிஸா, லக்சித்த செவன தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்த 68 வயதுடைய பரீனா முஸம்மில் ஆகிய மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக
மாளிகாவத்தை பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இந் நிலையில் குறித்த பண உதவி வழங்க ஏற்பாடு செய்த மோட்டார் வாகன உதிரிப்பாக வர்த்தகரையும் அவரது சகாக்கள் ஐவரையும்
மாளிகாவத்தை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.எவ்வித கவனமும் இன்றி மிக ஆபத்தான முறையில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமை, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அதனை மீறி மக்களை ஒன்று திரட்டியமை,
கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணாமல் நடந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாக மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை
தொடர்பிலேயே இந்த ஆறுபேரையும் கைது செய்ததாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் களஞ்சியசாலை ஒன்று மாளிகாவத்தை, ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் உள்ளது. இந்நிலையில் குறித்த வர்த்தகர் ஒவ்வொரு வருடமும்
புதித ரமழான் 27 ஆம் தினத்தன்று அப்பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு பண உதவி செய்து வருவதை வழக்காக கொண்டிருந்துள்ளார். இந் நிலையிலேயே நேற்றும், குறித்த வர்த்தகர் பண உதவி வழங்குவதாக
பிரதேசத்தில் அரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள மக்கள் அவரது களஞ்சிய வளாகத்தில் ஒன்று கூடியுள்ளனர். சுமார் 300 முதல் 400 பேர் வரை இவ்வாறு அங்கு ஒன்று கூடியுள்ளதாக
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறினார். நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் எந்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும்
அவர்கள் கையாண்டிருக்கவில்லை எனவும், சமூக இடைவெளி இல்லாமல் அவர்கள் அனைவரும் அந்த களஞ்சிய வளாகத்தில் ஒன்று கூடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாளிகாவத்தை தாருஸ் சலாம் பாடசாலையிக்கு
எதிர் திசையில் அமைந்துள்ள மூடப்பட்ட முற்றிலும் மதில்களால் மூடப்பட்டு கருப்பு நிற வாயில் போடப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலையில் ஒன்று கூடியவர்களில் பலருக்கு பண உதவி வழங்கப்ப்ட்டுள்ள நிலையில்,
அதனை பெற்றவர்கள் வெளியே செல்லாமல், அறிவித்தல் ஒன்றுக்கு அமைவாக மீளவும் இரண்டாவது தடவையாகவும் பணம் பெறும் நோக்கில் அங்கு அந்த வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர்.
இதனால் அங்கு சன நெரிசல் ஏர்பட்டு நிலைமை பாரதூரமாக மாறியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
குறித்த வர்த்தகர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தனது வர்த்தக நிலையத்துக்கு செல்வதாக கூறி ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுள்ளார். எனினும் மக்களை ஒன்று திரட்டி இவ்வாறு உதவித் தொகை வழங்குவது குறித்து பொலிஸாருக்கோ
அல்லது பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகருக்கோ அறிவிக்கவில்லை. இதனை அவர் வீதியில் வைத்து செய்திருந்தால் பொலிஸாரின் கண்களிலாவது சிக்கியிருக்கும். எனினும் சுமார் 300 இற்கும் அதிகமானோரை
மதில்களால் மூடப்பட்ட தனது வர்த்தக களஞ்சிய வளாகத்தில் வர்த்தகர் ஒன்று சேர்த்திருக்கின்றார். தற்போதைய சூழ் நிலையில் இது எவ்வளவு ஆபத்தான விடயம். சமூக இடைவெளி, கொரோனா பாதுகாப்பு
வழி முறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை.' என சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். இந் நிலையில் இன்று மாலை, சம்பவ இடத்துக்கு
கொழும்பு மேலதிக நீதிவான் கஞ்சனா நெரஞ்சலா டி சில்வா நேரில் சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை நடாத்தினார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகலுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கைதான 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.