திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மீண்டும் மூடப்படலாம்..! மக்களின் செயற்பாடுகள் எரிச்சலுாட்டுவதாக அரசு சீற்றம்..
மதுபானசாலைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மதுபானசாலைகளில் மக்கள் நடந்து கொள்ளும் விதம் எரிச்சல் ஊட்டுகிறது. என கூறியிருக்கும் அமைச்சரவை இணை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன இதே நிலைய தொடர்ந்தால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இத்தனை நாட்கள் அரசாங்கம் முன்னெடுத்த பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் அனைத்துமே இதனால் வீணாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது. மக்களுக்காக தளர்த்தப்படும் கட்டப்பாடுகளை மக்களே மீறினால் பார்த்தக் கொண்டிருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், கொவிட் -19 தாக்கத்தில் இருந்து நாடு இப்போது தான் படிப்படியாக விடுபட்டு வருகின்றது.
கட்டம் கட்டமாக நாட்டில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதனை சீரழிக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டால் யாருக்குமே இந்த தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது போய்விடும்.
சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மீண்டும் இடம் கொடுத்தால் இரண்டாம் சுற்று தாக்கம் ஒன்று உருவாக்கும் என்பது உலகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஜெர்மன், சிங்கபூர், கொரியா போன்ற நாடுகளில் முழுமையாக வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்த பின்னர்
தேர்தல் நடத்தியும் ஏனைய அனாவசிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் மீண்டும் இரண்டாம் சுற்றில் வைரஸ் தாக்கம் உருவாகியுள்ளது.இலங்கையில் இப்போது கொடுக்கும் சுதந்திரத்தை அனாவசியமாக மக்கள் கையாள நினைத்தால் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவும்,
அதேபோல் ஊரடங்கு சட்டத்தில் கையாள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் அதிரடிப்படையை கொண்டு முன்னெடுக்க வேண்டி வரும். இதில் மதுபானசாலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்றார்.