SuperTopAds

13 உத்தரவுகளை வழங்கிய ஜனாதிபதி..! உடனடியாக செயற்படுத்துமாறு கொரோனா எதிர்ப்பு செயலணி, அமைச்சுக்களுக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
13 உத்தரவுகளை வழங்கிய ஜனாதிபதி..! உடனடியாக செயற்படுத்துமாறு கொரோனா எதிர்ப்பு செயலணி, அமைச்சுக்களுக்கு பணிப்பு..

நாடு வழமைக்கு திரும்யிருக்கும் நிலையில் அடுத்தகட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து கொரோனா எதிர்ப்பு செயலணி மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று உயர்மட்ட கலந்துரையாடலை நடாத்தினார். 

இந்த கலந்துரையாடலின்போது 13 உத்தரவுகளை கொரோனா எதிர்ப்பு செயலணிக்கும், அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார். அவற்றை உடனடியாக பின்பற்றுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அவையாவன, 

மக்களின் இயல்பு வாழ்வையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுப்பதற்காக கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் சலைக்காமல் தைரியத்துடன் செயற்படுங்கள்.

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது. முன்னர் செய்த தவறுகளை பாடமாக எடுத்துக் கொண்டு செயற்படுங்கள். மீள நிகழாதிருப்பதை உறுதி செய்யுங்கள்.

கடற்படையிலும், கொழும்பு- வாழைத்தோட்டம் பகுதியிலும் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட காரணம் என்ன என்பதை ஆராயுங்கள், தொடர்ந்து பரிசோதனைகளை நடாத்துங்கள்.

பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற - மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக பரிசோதியுங்கள்.

நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்டுங்கள். 

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் பாடசாலைப் பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் விரிவாக அறிவூட்டுங்கள்.

வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனைச் செய்யுங்கள்.

சட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினைகளுடன், கிராமிய மக்களின் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன அது குறித்து கரிசனை செலுத்துங்கள்.

அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாகப் பாதுகாப்புத் துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்பட்டுவரும் அபாய நிலைமை குறித்து நடவடிக்கை எடுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கியச் செயற்பாடுகளை மக்களிடத்தில் மீண்டும் ஆரம்பியுங்கள். 

தரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதற்கு வழிமுறைகளைக் கண்டறியுங்கள். 

விவசாய அறுவடைகளை நீண்ட நாள்களுக்குச் சேமித்து வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.