சுமந்திரன்போல் எனக்கு காக்கா பிடிக்கத் தெரியாது-என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா ? மணிவண்ணன் சவால்

ஆசிரியர் - Admin
சுமந்திரன்போல் எனக்கு காக்கா பிடிக்கத் தெரியாது-என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா ? மணிவண்ணன் சவால்

நான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் இந்த அரசியலில் இருந்து விலகிவிடுகின்றேன். 


அவரால் இக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நேற்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் கிட்டுபூங்காவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் மணிவண்ணன் வரிசெலுத்தாது வாகனம் கொள்வனவு செய்ததாகவும் அதற்காக அவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் காக்காபிடித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். 


அதற்கு பதிலளித்து இன்று (07.02.2018) புதன்கிழமை கிட்டுபூங்காவில் உரையாற்றியபோதே மணிவண்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு உரையாற்றிய அவர்,


“ நான் யாரிடமும் காக்கா பிடிக்கவில்லை. நான் வரி செலுத்தியே எனது வாகனத்தை இறக்குமதி செய்தேன். இதோ அதற்கான சுங்கத்திணைக்களத்தால் வழங்கப்பட்ட என்னிடம் உள்ளது. இதை யாரும் பார்வையிடலாம். நான் ரூபா 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரியினைச் செலுத்தியிருக்கின்றேன்.


நான் ஏப்பிரல் 2017 இல் வாகனம் ஒன்றினை ஜப்பான் நாட்டில் கொள்வனவு செய்திருந்தேன். அதற்கான பணமும் அங்கு செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அரசாங்கம் திடீரென குறித்த வகை வாகனத்துக்கான வரியினை 50 இலட்சத்தால் அதிகரித்தது. 


இந்நிலையில் 02.06.2017 அன்று நாம் முன்னர் ஓடர் செய்திருந்த கார் இலங்கைக்கு வந்தடைந்திருந்தது. வழமையாக இவ்வாறு திடீரென வரி அதிகரிப்புச் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் முன்னராக வாகனங்கள் கொள்வனது செய்யும்போது நடைமுறையிலிருக்கும் வரியினையே அறவிடுவது வழக்கமாக இருந்தது.


எனினும் நான் உட்பட 37 பேருடைய வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக வரி அறவீடு கோரப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட எமது தரப்பினைச் சேர்ந்தவர்கள் வழக்குத் தொடர முற்பட்டபோது வியாபார நோக்கமற்று சொந்தப் பாவனைக்காக வாகனங்கள் கொள்வனது செய்த 26 பேருக்கு முன்னர் பின்பற்றப்பட்ட வரி நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


அதில் நான் உட்பட இருவர் தமிழர்கள் ஏனையவர்கள் சிங்களவர்கள். குறித்த 26 பேருக்கும் முன்னர் நடைமுறையில் இருந்த வரிவிதிப்பினை ஏற்றுக்கொள்வதான வர்த்தமானி அறிவித்தலே எங்களுயைட பெயர்களோடு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் நான் ரூபா 40 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரியினைச் செலுத்தி குறித்த வாகனத்தினை பெற்றுக்கொண்டேன். 


முன்னர் நடைமுறையில் இருந்த வரி நடைமுறையினை ஏற்றுக்கொள்வது என்பது அமைச்சரவை எடுத்த முடிவாகும். அவ் வர்த்தமான அறிவித்தலை வைத்துக்கொண்டே சில தரப்பினர் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரத்தினை மேற்கொண்டுவருகின்றனர். 


இந்த நடைமுறை தவறான ஒரு செயற்பாடு அல்ல. நான் எனது வாகனத்திற்கான வரியினை நியாயப்படி செலுத்தியிருக்கின்றேன். இது தவறு எனில் இதனை அரசியல் வியாபாரமாக்கும் சுமந்திரன் இதுவரை இதற்கு எதிராக வழங்குத் தெடராதது ஏன்? -என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு