கடற்படைச் சாரதியுடன் விபத்தில் பாதிக்கப்பட்டவரையும் சந்தேக நபராக இணைந்த பொலிசாரை கண்டித்த நீதிவான்!

ஆசிரியர் - Admin
கடற்படைச் சாரதியுடன் விபத்தில் பாதிக்கப்பட்டவரையும் சந்தேக நபராக இணைந்த பொலிசாரை கண்டித்த நீதிவான்!

புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில், மாணவியின் மாமனாரையும் பொலிஸார் சந்தேகநபராக வழக்கில் இணைத்துள்ளமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் கண்டிப்புடனான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவி உயிரிழந்திருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விபத்தை ஏற்படுத்திய சாரதியும், மாணவியை ஏற்றிச் சென்ற மாமனாரையும் பொலிஸார் ஒரே வழக்கின் கீழ் பதிவு செய்திருந்தனர்.


இது தொடர்பில் நீதிவான் வினவியபோது, மாணவிக்கு தலைகவசம் அணியாது, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள். இதனையடுத்து, தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர, வழக்கில் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என நீதிவான் பொலிஸாருக்கு கண்டிப்புடனான அறிவுறுத்தல் விடுத்தார்.


அத்துடன், மாமனாரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்த நீதிவான், குறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும், மாணவியின் மாமனாரும், இணைக்கப்பட்டு உள்ளமையால், ஒரு அப்பாவி தண்டிக்கப்பட கூடாது எனும் நோக்கில், அந்த வழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும் போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு