காணி விடுவிப்பு போராட்டம் - மூன்றாவது ஜனாதிபதியிடம் நீதி கேட்கும் மக்கள்!
தமது காணிகளை விடுவிக்க கோரி ஆரம்பித்த காணி மீட்பு போராட்டம் மூன்று ஆண்டுகளை கடந்திருப்பதை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கேப்பாப்பிலவில் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டதைப் போன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக மிகுதிக் காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எமது பூர்வீக நிலத்திற்கான போராட்டம் ஆரம்பித்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த நாளில் எமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். கடந்த பதினொரு வருடங்களில், தற்போது நாட்டிற்கு புதியதொரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது ஜனாதிபதியிடம் நீதி கோரும் வகையில் இப்போராட்டம் அமைந்துள்ளது.
இந்த மூன்றாவது ஜனாதிபதியாவது, எங்களுடைய நிலங்களுக்கான ஒரு நீதியைப் பெற்றுத்தருவார் என்ற ஒரு நம்பிக்கையில் நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். எமது காணிகளுக்காக நாம் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்பதெனத் தீர்மானித்திருக்கிறோம்.
தற்போது கேப்பாப்பிலவு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு, மறுபகுதி விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகள், பொது நோக்குமண்டபம், மைதானம் எவையுமே இல்லாத நிலையில் காணப்படுகின்றது. அனைத்தும் இராணுவம் அபகரித்து வைத்துள்ள பகுதிகளுக்குள்ளேயே காணப்படுகின்றன.
எனவே, விரைவில் விடுவிக்கப்பட வேண்டிய மிகுதிக் காணிகளையும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ள பகுதிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் – என்றனர்.
இப்போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வ.கமலேஸ்வரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், த.அமலன், குகநேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.