போராட்டங்களின் வெற்றியினை வெற்றுக்கோஷங்களால் மட்டும் அடைந்துவிடமுடியாது. -சி. தவராசா, எதிர்க்கட்சித் தலைவர்

ஆசிரியர் - Editor I
போராட்டங்களின் வெற்றியினை வெற்றுக்கோஷங்களால் மட்டும் அடைந்துவிடமுடியாது. -சி. தவராசா, எதிர்க்கட்சித் தலைவர்

3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றும் படி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது அவ் அரசியல் கைதிகளின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அதற்கான அணுகுமுறைக்கும் கிடைத்த ஓர் வெற்றி ஆகும்.

இம் 3 அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம் ஆரம்பித்த மறுநாளே நான் அவர்களை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தது மட்டுமல்ல அவர்களது கோரிக்கையினை பத்திரிகை மகாநாடொன்றினை நிகழ்த்தி யாவரிற்கும் அறியச் செய்தது மட்டுமல்ல, அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய சம்மந்தன் ஐயா அவர்களினதும் முதலமைச்சரினதும் கவனத்திற்கு இவ்விடயத்தினைக் கொண்டுவந்திருந்தேன்.

ஜனாதிபதி யாழ் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்த போது இவ் வழக்கு இடமாற்றம் தொடர்பாக வழிமறித்துப் போராடியவர்கள், அப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரான சிவாஜிலிங்கம், ஜனாதிபதி அழைத்தததன் பேரில் அவரிற்கு அண்மையில் சென்று உரையாடிய போது சிவாஜிலிங்கத்தைத் துரோகி என்று வர்ணித்தனர்.

இவ்வாறு துரோகப் பட்டம் சூட்டியவர்கள் அவ் வழக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுப்பதற்குக் கூட முன் வரவில்லை. அரசியல் கைதிகளின் போராட்டத்தை தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தியது மட்டுமே அவர்கள் செய்தது.

ஜனாதிபதி வருகையின்போது தனது எதிர்ப்பைக் காட்டி நின்ற சிவாஜிலிங்கம், அவருடன் பேசியது மட்டுமல்ல, அதன் தொடர் நிகழ்வாக சிவன் அறக்கட்டளைத் தலைவர் கணேஸ் வேலாயுதத்துடன் ஜனாதிபதியைக் கொழும்பில் சந்தித்து இது தொடர்பாகப் பேசியிருந்தனர். அப்போது ஜனாதிபதி நீதித்துறையில் தான் நேரடியாகத் தலையிட முடியாதென்றும், சட்டமா அதிபர் வெளிநாடு சென்றிருப்பதனால் அவர் திரும்பியதும் அவருடன் பேசி ஓர் சுமூகமான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அவர்களிடம் கூறியிருந்தார்.

அத்துடன் நின்று விடாது கணேஸ் வேலாயுதத்தின் அனுசரணையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் விளைவே இன்றைய வெற்றிக்கு வழிவகுத்தது.

இவ் வழக்கினைப் பதிவுசெய்து வாதாடியவர் கணேஸ் வேலாயுதத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சந்திரலால் ஆவார். இவர் ஓர் தமிழர் அல்ல என்பது மட்டுமல்ல, காலம் சென்ற மகேஸ்வரி வேலாயுதத்துடன் இணைந்து செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தகால அரசில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த போது அவரின் இணைப்பு செயலாளராகவும் இவர் செயற்பட்டவர்.

போராட்டங்களின் வெற்றியினை வெற்றுக்கோஷங்களால் மட்டும் அடைந்துவிடமுடியாது. சரியான அணுகு முறையும் போராட்டத்தின் வெற்றிக்கு ஓர் முக்கிய காரணி ஆகும் என்பதனை இவ் அரசியல் கைதிகளின் விடயத்திலிருந்தாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு