தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது குமாரவடிவேல் குருபரன் கடும் குற்றச்சாட்டு (VIDEO)

ஆசிரியர் - Admin
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது குமாரவடிவேல் குருபரன் கடும் குற்றச்சாட்டு (VIDEO)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நடுநிலையானவர். இயன்றவரை தேர்தல்கள் முறைமையை பக்கச் சார்பற்றுத் திறமையாக நடாத்தி வருகின்றார் என்பதை நாங்கள் நீதிமன்றத்திலேயே பதிவு செய்துள்ளோம். ஆனால், ரட்ணஜீவன் கூல் என்கின்ற குறிப்பிட்ட தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரொருவர் மாத்திரம் தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொதுவிம்பத்திற்கும், மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் முரணாகச் செயற்பட்டு வருகிறார். குறிப்பிட்டதொரு கட்சியின் பிரசாரத்திற்குத் துணை போகின்றார் என யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(02) நண்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குத் தொடர்பில் தேர்தல் அதிகாரி கலாநிதி ரட்ணஜீவன் கூல் யாழில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து குறிப்பிட்ட வழக்கில் ஒரு தரப்பாகவிருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி என்ற அடிப்படையில் சில தெளிவுபடுத்தல்களை செய்ய விரும்புகின்றேன்.

கலாநிதி ரட்ணஜீவன் கூல் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் அவர் பயன்படுத்திய மொழிநடை, சொற்கள் என்பன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராகவுள்ள ஒருவர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளல்ல.

V25- 2018 என்ற குறித்த வழக்கு சிரேஸ்டப் பொலிஸ்மா அதிபர் எழுதிய கடிதத்திற்கமைவாக கடந்த-09 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை தேர்தல் பிரசாரத் தேவைகளுக்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை எனும் பெயரில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பயன்படுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறித்த வழக்கில் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனவரி-09 ஆம் திகதி தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 11 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைச் சேர்ந்த ஞானஸ்கந்த சர்மாக் குருக்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியது.

இந்நிலையில் ஞானஸ்கந்த சர்மாக் குருக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன்னர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ஆலயத்திற்குட்பட்ட பகுதியில் எந்தவிதத் தேர்தல் பிரசாரங்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெளிவாக கூறியிருக்கின்றார். அவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபடவே வருகை தந்தார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக அங்கு பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவில்லை. பாதாதைகள் எவையும் ஆலயத்திற்குட்பட்ட பகுதியில் காட்சிப்படுத்தப்படவில்லை என அந்த வாக்கு மூலத்தில் ஆலயக் குருக்கள் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான சூழலில் 11 ஆம் திகதி ஆலயக் குருக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறாமலிருக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் ஆலயத்தில் தேர்தல் பிரசாரங்களுக்குக்கு அனுமதி வழங்கக் கூடாதெனவும் நீதவான் ஆலயக் குருக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கினார் என்பதற்காக நீதவான் இவ்வாறான விடயத்தைக் குறிப்பிடவில்லை. இது தான் சட்டம் என்ற தெளிவு வழங்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு வருகை தர வேண்டியதில்லை எனவும் ஆலயக் குருக்களுக்குச் சொல்லப்பட்டது.

ஆனால், அன்றைய தினமே குறித்த வழக்கு முடிவுறுத்தப்படாமல் பெப்ரவரி மாதம்- 07 ஆம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்காக் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கு இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் கடந்த ஜனவரி மாதம்-15 ஆம் திகதி கலாநிதி ரட்ணஜீவன் கூல் எழுதிய கட்டுரையொன்று கொழும்பிலுள்ள இரு ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகியது. அந்தக் கட்டுரையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் முறையான விசாரணைகளில் ஈடுபடவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக ஆலயக் குருக்கள் நீதிமன்றம் அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார் எனவும் அது போதாதெனவும், இந்த விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 19-01-2018 இல் கலாநிதி ரட்ணஜீவன் கூல் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் நேரடியாக ஒரு வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அந்த வாக்கு மூலமும் நீதிமன்ற வழக்குப் பதிவேட்டிலுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வரலாற்றிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் நேரடியாகப் பொலிஸாரிடம் சென்று நீங்கள் விசாரித்தது போதாது...எனவே, நீங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்தும் நடாத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வாக்குமூலம் வழங்கியமை இதுவரை நடைபெறாத புதியதொரு விடயம்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆறு நபர்களுக்கு அழைப்பாணை அல்லாமல் அறிவித்தல் வழங்குமாறு நீதவானிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து நீதவான் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைச் சேர்ந்த ஞானஸ்கந்த சர்மாக் குருக்கள், இரட்சபாபதிக் குருக்கள், வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தேர்தல் அதிகாரி கலாநிதி ரட்ணஜீவன் கூல், சட்டத்தரணி மணிவண்ணன், சைக்கிள் சின்னத்தில் வலி. வடக்குப் பிரதேச சபையில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்குமாறு கடந்த- 25 ஆம் திகதி நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த அறிவித்தலில் பிரகாரம் கடந்த- 30 ஆம் திகதி வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், சட்டத்தரணி மணிவண்ணன், சைக்கிள் சின்னத்தில் வலி. வடக்குப் பிரதேச சபையில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைச் சேர்ந்த ஞானஸ்கந்த சர்மாக் குருக்கள், இரட்சபாபதிக் குருக்கள் ஆகிய இருவரும் அன்றைய தினம் ஆலயத்தில் இலட்சார்ச்சணை இடம்பெறுன்றமையால் ஆலயக் கடமைகளிருப்பதாகத் தங்கள் சட்டத்தரணி மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்கள். சட்டத்தரணி சுகாஸ் அன்றைய தினம் ஆலயத்தில் இலட்சார்ச்சணை இடம்பெறுவதற்கான ஆதாரத்தை மன்றில் சமர்ப்பித்ததுடன் அவர்கள் நேரடியாக வருகை தர முடியாமைக்கு வருந்துவதாகவும் தெரிவித்து அவர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் முன்னிலையாகியிருந்தார்.

ஆறுபேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் தனக்கு அறிவித்தல் கிடைக்கப் பெறவில்லை என கலாநிதி ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். அந்த அறிவித்தல் உண்மையாகவே கிடைக்கவில்லையா? என்பது தொடர்பில் பொலிஸாரே பதில் சொல்ல வேண்டும். அவர் இந்த விடயம் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்கியதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். உண்மையிலேயே குறித்த வழக்கில் முறைப்பட்டாளராக வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் காணப்படும் நிலையில் கலாநிதி ரட்ணஜீவன் கூல் காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு நேரடியாக வாக்குமூலம் வழங்கியமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டங்கள், விதிமுறைகளுக்கு அமைவானதா? என்பது கேள்விக்குரிய விடயம்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம்-07 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ள வழக்கு முன்கூட்டியே அளிப்பதற்கான காரணமென்ன என நாங்கள் அனறைய தினம் பொலிஸாரிடம் கேள்வியெழுப்பினோம். இதற்குப் காங்கேசன்துறை தலைமைப் பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார் நீண்ட சமர்ப்பணங்களைச் செய்திருந்தார்கள். அவர்கள் தமது சமர்ப்பணத்தில் எங்களிடம் வேறு சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில் மேலதிக சாட்சியங்கள் காணப்பட்டால் மன்றுக்கு கொண்டுவருவதற்காகவே சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அப்போது முறைப்பாட்டாளர் இங்குள்ளார். அவரிடம் வேறு சாட்சியங்கள் உள்ளதா? என கேட்குமாறு நீதவானிடம் தெரிவித்தார். முறைப்பாட்டாளரிடம் இது தொடர்பில் வினாவிய போது வேறு ஆதாரங்கள் தன்னிடமுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

கலாநிதி ரட்ணஜீவன் கூல் இந்த வழக்குத் தொடர்பில் பொலிஸார் பட ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றச்சாட்டியுள்ளார். ஆனால், அவர் கூறியுள்ளமை முற்றுமுழுதான பொய். பத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தோம். நாங்கள் பார்த்திருக்க படங்களை பொலிஸார் ஒவ்வொன்றாக நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்திருந்தார்கள். ஏற்கனவே வழக்கேட்டில் குறித்த படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட படங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமானவையல்ல என பொலிஸார் தமது சமர்ப்பணத்தின் போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கலாநிதி ரட்ணஜீவன் கூல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என வழக்கில் என்ன நடைபெற்றது? என அறியாமல் நீதவான் நீதிமன்றம் முறையாக பக்கச் சார்பற்றுச் செயற்பட்டிருக்கிறது என்ற தோரணையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளான மணிவண்ணன், தாயுமானவர் நிகேதன் போன்றவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்க வேண்டுமென்ற அழுத்தம் கலாநிதி ரட்ணஜீவன் கூல் மூலமாகத் தங்களுக்கு விடுக்கப்பட்டதாக பொலிஸார் சமர்ப்பணத்தின் போது தெரிவித்திருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதாகவுள்ளது.

குறித்த வழக்கில் நாங்கள் மன்றில் சுட்டிக் காட்டிய பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக சாட்சியங்கள் இல்லை என முறைப்பட்டாளரும், பொலிஸாரும் தெரிவித்ததற்கமைய இந்த வழக்கைக் கொண்டு நடாத்துவதற்கான தேவையில்லை என்ற முடிவுக்கு நீதவான் வருகிறார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட் தேர்தல் ஊர்வலமொன்றில் தம்மிடம் சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் தாராளமாக இருக்கின்றன. நானே குறித்த காணொளியைப் பார்வையிட்டிருக்கின்றேன். அதுமாத்திரமல்லாமல் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரொருவரை மிரட்டினார் என்பது தொடர்பில் அந்தப் பெண்ணே சாட்சியம் வழங்கியுள்ளார். ஆனால், இவையெல்லாம் இதுவரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வரவில்லை. ஆனால், ஆலயத்திற்கு வெளியே கூடிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரை இதுவரை மூன்று தடவைகள் நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர். இது எந்தவகையில் நியாயம்?

ஒரு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்களைக் காவலாளிகள் என ஏசுவது மிகவும் அபத்தமானது.ஒரு கட்சிக்காரன் இன்னொரு கட்சிக்காரனை இவ்வாறு ஏசினால் அது தேர்தல் ஒழுக்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதென நாங்கள் கூறும் நிலையில் ஒரு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இவ்வாறு செயற்படுவது முறையா?

இவ்வாறானதொரு நிலையில் தான் கடந்த - 22 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ரட்ணஜீவன் கூல் பக்கச்சார்பாகச் செயற்படுவதனால் தொடர்ந்தும் இவர் வடக்கு, கிழக்குத் தொடர்பான கடமைகளிலாவது ஈடுபடுவதை நீங்கள் மட்டுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அந்த வழக்கின் தன்மையை உருமாற்றம் செய்தல் அல்லது மடைமாற்றம் செய்யும் வகையில் யாரும் தலையிடாக் கூடாதென்ற பொதுவிதி காணப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றிருக்கும் வேளையில் வழக்குக்காக வந்திருக்கும் விடயத்தை திசைதிருப்ப முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெற்றவற்றை அவர் விமர்சித்து எழுதுகின்றார். நீதிமன்றத்தை விமர்சித்து எழுதக் கூடாதென்பதல்ல....ஆனால், குறித்த வழக்கை மடைமாற்றும் வகையில் அவர் எழுதியுள்ளார். இவ்வாறு எழுதுவது முறையானதல்ல? என்பது ரட்ணஜீவன் கூலுக்குத் தெரியாதா?, எனக்கு ஆங்கிலம் தெரியாதா? எனக் கேட்கும் அவருக்கு அடிப்படை விதிமுறைகள் கூடத் தெரியாதா? இந்த விடயம் தொடர்பில் சாதாரண பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு