முல்லைத்தீவு மீனவர்களுக்கு தேவை வெளிச்சவீடு.

முல்லைத்தீவு மீனவர்களின் இன்றியமையாத தேவையாக இருக்ககூடிய வெளிச்சவீட்டை அமைப்பதற்கு, உரிய பொறுப்பாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் வெளிச்சவீடு ஒன்று இல்லாததால் அங்கு தொழில் செய்கின்ற மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலுக்கு சென்று திரும்பும்போது திசைமாறிச்சென்று பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலை மாற்றம் பெற்று எமது முல்லைத்தீவு மீனவர்கள் நிம்மதியான முறையில் தமது தொழிலைச் செய்து கரைதிரும்புவதற்காக வெளிச்சவீடு அமைத்துக்கொடுக்கப்படவேண்டும்.
மேலும் இரவு நேரங்களில் திசைமாறிச் செல்லும் மீனவர்களின் இடர்பாடுகள் மற்றும் அவர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு முல்லைத்தீவு நகரில் 1896ம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபையால் கலங்கரை விளக்கம் என்ற சொல்லப்படும் வெளிச்சவீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது
1896ம் ஆண்டு 66அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த குறித்த வெளிச்சவீடானது கடந்த காலங்களில் நடைபெற்ற அனர்த்தங்களோடு அழிவடைந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் 5000இற்கு மேற்பட்ட மீனவர்கள் தொழில் செய்துவருகின்றார்கள். இருந்தும் அவர்கள் இரவு நேரங்களில் பெரிதும் சிரமப்பட்ட நிலையிலேயே தொழில் செய்துவருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் வெளிச்சவீடு இன்மையால் தமக்கு ஏற்படும் சிரமங்களை தங்களுடைய அமைப்புகளின் ஊடாக உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியிருந்தனர். இருந்தும் அதற்கான தீர்வுகள் அவர்களுக்குக் கிடைக்காத நிலை தொடர்ந்து காணப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் மீனவர்கள் என்னிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களிலும், மாகாணசபை அமர்வுகளிலும் தொடர்ச்சியாக பலதடவை வலியுறுத்தியிருந்தேன். இருந்தும் தீர்வுகள் ஏதும் வராத நிலையில் இவற்றின் தொடர்ச்சியாக கடந்த வருடம் 27.07.2017அன்று நடைபெற்ற மாகாணசபையின் 100வது அமர்விலே பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தேன்.
இன்றுவரை மாவட்ட மீனவர்களின் அத்தியாவசிய இத்தேவை நிறைவேற்றப்படவில்லை. தொடர்புடையவர்கள் விரைந்து இத் தேவையின் இன்றியமையாநிலையை கவனத்தில் கொண்டு உதவவேண்டுமென தெரிவித்தார்.