பொலிஸ் அதிகாரியின் விளக்கத்தை கேட்டு குண்டு தயாரித்த சஹ்ரான்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் காசிம், குண்டு தயாரிக்க எவ்வாறு கற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.பௌத்தர்கள் மீதே தாக்குதல் நடத்த முன்னர் திட்டமிட்டதாகவும் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில், ஒரு பொலிஸ் அதிகாரியொருவர் வழங்கிய விளக்கத்தைக் கேட்ட பின்னரே சஹ்ரான் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பழகியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவலில் உள்ள ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்போதே இந்த தகவல்கள் வெளியாகியன.
குறித்த சந்தேகநபர் பிரத்தியேக இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டு, காணொளி தொழில்நுட்பம் மூலம் ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ளார்.
இதன்போது அவர் “இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் என்ற அமைப்பில் செயற்பட்டேன். பின்னர் 2012ஆம் ஆண்டில் ஜமா அய்த் இஸ்லாமிய அமைப்பில் இணைந்து 2013ஆம் ஆண்டு முதல் மாகாண ஒருங்கிணைப்பாளராகி பின்னர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் இருந்தேன்.
கடந்த 2018ஆம் ஆண்டில் திகன பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னரே சஹ்ரான் ஹாஷிமைச் நானும் எனது குழுவினரும் முதன்முறையாக சந்தித்தோம். இதன்போது மசூதிகளைத் தாக்கியவர்களை திருப்பித் தாக்க வேண்டுமென சஹ்ரான் எம்மிடம் தெரிவித்தார்.
நுவரெலியா, அம்பாந்தோட்டையிலுள்ள இரகசிய மறைவிடங்களில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றோம். குறித்த முகாம்களில் நான் உட்பட 150இற்கும் மேற்பட்டவர்களுக்கு சஹ்ரான் ரி-56 துப்பாக்கியைக் பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சியளித்துள்ளார். எனினும், வனாத்தவில்லுப் பகுதியில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம் சிக்கிய பின்னரே தற்கொலைத் தாக்குதல் நடத்தவேண்டுமென சஹ்ரான் முடிவுக்கு வந்தார்.
பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்றுதான் சஹ்ரான் குறிப்பிட்டிருந்தார். ஏன் கிறிஸ்தவர்களைக் குறிவைத்தார்கள் என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது.
இதேவேளை, வெடிகுண்டு தயாரிப்பதைப் பற்றி சஹ்ரான் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. அப்படியான காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருக்காமல் விட்டால், சஹ்ரானால் வெடிகுண்டு தயாரித்திருக்க முடியாது” என அவர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.