செம்மணியில் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித புதைகுழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகள் மழை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.
அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பணிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில், மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் அகழ்வின் போது, முழுமையான மனித என்புத்தொகுதி, அதற்கு மேலதிகமாக மண்டையோடு மற்றும் கை எலும்பு துண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.