யாழில் பொலிஸாரின் ஆசியுடன் இடம்பெறும் பாரிய மோசடி

ஆசிரியர் - Editor II
யாழில் பொலிஸாரின் ஆசியுடன் இடம்பெறும் பாரிய மோசடி

பளைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்குப் பொலிஸ் அதிகாரிகள் துணைபோகின்றனர் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:

பளை – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி, அல்லிப்பளை, புலோப்பளை, முகமாலை மற்றும் சோரன்பற்று போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் உட்பட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். எனினும், எவரும் இதனைத் தடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். குறிப்பாக பொலிஸார் மிக இரகசியமான முறையில் அவர்களுக்கு உதவிசெய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக மணல் அகழப்படும் சந்தர்ப்பங்களில் பிரதேசவாசிகள் சிலர் தொலைபேசியூடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குகின்றனர். அவ்வாறு தகவல் வழங்கும் நபர்களின் தொலைபேசி உட்பட்ட சகல விவரங்களும் பொலிஸார் ஊடாக மணல் கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்டு விடுகின்றன.

இதனால் பலர் பாரிய சமூகச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தகவல் வழங்குவதற்கும் தயங்குகின்றனர். நேரடியாகச் சென்று முறைப்பாடு செய்தால் மட்டும் ஒப்புக்காக ஒருசிலரைப் பிடித்து நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்னர் விடுவிக்கின்றனர்.

எனவே, இதுபோன்ற செயற்பாடுகளை உரியவர்கள் நிறுத்த வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரிவரச் செய்யவேண்டும். எமது பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேன்டும் – என்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு