இரண்டரை கோடி காசுக்கும், BMW காருக்கும் ஆசைப்பட்டு 31 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து பஞ்சு மூட்டையை வாங்கிய யாழ்ப்பாண குடும்பம்..!
பிரிட்டனில் அதிஷ்டலாப சீட்டிலுப்பில் பெருமளவு பணம் மற்றும் பீ.எம்.டபிள்யூ கார் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு 31 லட்சம் பணத்தை கடனுக்கும், வட்டிக்கும் வாங்கி கொடுத்த பருத்துறையில் உள்ள குடும்பம் பணத்தை இழந்துள்ளது.
தொலைபேசி வழியாக திருடும் ஏமாற்றுப் பேர்வழிகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டு வருகின்றபோதும், தொடர்ந்தும் ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சம்பவமொன்றே இது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
இந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாதத்தின் முன் கையடக்கத் தொலைபேசி குறுந்தகவல் ஒன்று வந்தது. பிரித்தானியாவில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் இந்த தொலைபேசி இலக்கம் வெற்றியாளராக தெரிவாகியுள்ளது,
10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண், பி.எம்.டபிள்யூ கார் என்பவற்றை பரிசாக பெற்றுள்ளீர்கள் என குறிப்பிட்டு, தம்மை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குடும்பத்தினர், 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை இலங்கை மதிப்பில் பெருக்கிப் பார்த்தனர்.
கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபா ஆகியது. கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்துள்ளது என மகிழ்ச்சியடைந்து, அந்த மின்னஞ்சலிற்கு தொடர்பு கொண்டனர். கார் ஒன்றின் திறப்பு, ஸ்ரேலிங் பவுண் தாள்களின் கட்டுக்கள் அடங்கிய
படங்களை பதிலுக்கு அனுப்பி, குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை தூண்டினார்கள். இந்த பரிசுகளை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக, தமக்கு 92,000 ரூபா வைப்பிலிடுமாறு அந்த குழு தெரிவித்தது. இதன்படி,
அவர்கள் கொடுத்த வங்கி இலக்கத்திற்கு பணத்தை வைப்பிலிட்டனர். இதன்பின்னர் மின்னஞ்சல், குறுந்தகவல் ஊடாக பலமுறை இரு தரப்பும் தகவல் பரிமாறிக் கொண்டனர். திணைக்களங்களிற்கு வரி கட்ட வேண்டுமென தெரிவித்து பலமுறை
அந்தக் குடும்பத்திடம் ஏமாற்று ஆசாமிகள் பணம் கறந்துள்ளனர். பணமும், காரும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதாக தெரிவித்து, பல திணைக்களங்களின் கடிதத் தலைப்புக்களுடன் தயாரிக்கப்பட்டபோலிப்படிவங்களை அனுப்பி அவர்களை ஏமாற்றி,
பணம் கறந்துள்ளனர். இவ்வாறு சுமார் ஒரு மாதம் நடந்த பரிமாற்றங்களில் 31 இலட்சம் ரூபாவை அந்தக் குடும்பம் இழந்துள்ளது. இரண்டரைக்கோடி பணம் மற்றும் கார் என்பவற்றை கணக்கிட்டு, வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும்
இந்தப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். பணமும், காரும் வந்து சேராததையடுத்து அவர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததும், வெள்ளவத்தைக்கு வந்து பணத்தையும், காரையும் பெற்றுக்கொள்ளும்படி அந்த ஏமாற்று ஆசாமிகள் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொகை பணம் என்பதால் உடனடியாக திறந்து பார்ப்பது ஆபத்தானது என்றும், அந்தப்பணம், காரின் ஆவணம், திறப்பு என்பன அடங்கிய பெட்டியொன்று தரப்படும் என்றும், வீட்டுக்கு கொண்டு சென்ற பின்னர் பெட்டியின் திறப்பு அவர்களின் வீட்டுக்கு
வந்து சேருமென்றும் ஏமாற்று பேர்வழிகள் தெரிவித்துள்ளனர்.இதை நம்பிய குடும்பத்தினர் வெள்ளவத்தைக்கு சென்றுள்ளனர். குறிப்பிட இடமொன்றிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு, அங்கு கறுப்பு நிற பெட்டியொன்றை வழங்கிய மர்ம நபர், திடீரென மாயமாகி விட்டார்.
அந்தப் பெட்டியுடன் அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். பெட்டியின் திறப்பு வருமென எதிர்பார்த்தபோதும், அது வரவில்லை .அந்த மர்ம நபர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனினும், பொறுக்க முடியாதென தீர்மானித்த அந்த குடும்பம்
பெட்டியை உடைத்தபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைந்த போத்தல் ஓடுகள், பஞ்சு, காகிதத் துண்டுகள் அதனுள் வைக்கப்பட்டிருந்தன.பாதிக்கப்பட்ட குடும்பம் நேற்று காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில்
இது குறித்து முறைப்பாடு செய்தனர். பரிமாறிக்கொண்ட தகவல்கள், தொலைபேசி இலக்கங்கள், வங்கி இலக்கம் என்பவற்றை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.