கேப்பாபுலவு மக்களுடன் வெளிநாட்டு பிரதிநிதிகள்

ஸ்ரீலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது.
மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வெளி நாட்டு பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பிரயா அபிலாசா வலையமைப்பு, சம உரிமை இயக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு இன்று திங்கட்கிழமை வருகை தந்துள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதிகளில் ஸ்ரீலங்கா படையினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம் 333ஆவது நாளாக இன்று திங்கட்கிழமையும் தொடர்கின்றது.
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட இந்த காணிகளுக்குள் கடந்த முதலாம் திகதி செல்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், 104 குடும்பங்களுக்கும் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் வருகை அமைந்துள்ளது.
இவர்களின் வருகையையடுத்து போராட்ட இடத்திற்கு அண்மையில் முள்ளியவளை பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்