புங்குடுதீவில் துடிதுடித்த சிறுமி! கொலையாளிகள் யார்?

ஆசிரியர் - Editor II
புங்குடுதீவில் துடிதுடித்த சிறுமி! கொலையாளிகள் யார்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! மானிடராய் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதனினும் அரிது” என்று மானுட பிறப்பின் மகத்துவத்தை அன்றொருநாள் பாடிவைத்தாள் ஔவை.

ஆனால் சமகாலத்தில் மானுட பிறப்பின் பெறுமதியை யார் அறிவர் என்று கேட்குமிடத்து அதற்கு பதில் கேள்விக்குறியே?

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்து இதற்கு சான்று!

யாழ். குடாநாட்டையே ஒரு கணம் உலுக்கிய கோர விபத்து அது.

எதிர்காலம் குறித்த எண்ணற்ற கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற 9 வயதான சிறுமி, இலங்கை கடற்படையின் கவச வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்ததுடன் அவரது உறவினர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

குறித்த பகுதியில் உள்ள கடற்படையினருக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக பயன்படும் கவச வாகனத்திற்கு 9 வயதான சிறுமி காவுகொள்ளப்பட்ட நாள்தான் அன்று.

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையின் வாகனம் மோதி இவ்வாறு உயிரிழந்தார்.

உண்மையில் இந்த விபத்து மனிதம் மறந்த மானுடத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டிய ஒன்று!

மேலும், இந்த மரணத்தை வெறுமனே விபத்து என்று கடந்துவிட்டு செல்ல முடியாத நிலையில் இதனை ஒரு கொலை என்று சொல்வதிலும் கூட தவறல்ல.

வெறும் ஐயாயிரத்திற்கு குறைவான மக்களே வாழ்ந்து வரும் அந்த பகுதியில் ஆறு கடற்படை முகாம்கள் செயற்பட்டு வருகின்றன.

தேவைக்கு அதிகமான முகாம்கள் மாத்திரமின்றி மேலதிக கடற்படை வாகனங்கள் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக அப்பகுதியில் ஏற்படும் பல விபத்துக்களுக்கு இது ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றது.

இந்நிலையில், இவ்வாறான விபத்து நேர்ந்தமைக்கு கவச வாகன சாரதியின் கவனயீனமும், அதிக வேகமும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்து ஒரு குழந்தையின் உயிரை பறிக்கும் அளவிற்கு மூர்க்கத்தனமான செயலை அந்த சாரதி அரங்கேற்றியுள்ளார் என்பது இத்தருணத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

இழந்தது ஒரு குழந்தை மாத்திரமல்ல, எதிர்காலத்தில் உருவாக இருந்த ஒரு சட்டத்தரணியாக இருந்திருக்கலாம், உயிர் காக்கும் வைத்தியராக இருந்திருக்கலாம் அல்லது மண்ணின் நிலையை வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் ஏதோ ஒரு மாற்று சக்தியாக செயற்படக்கூடியவளாக இருந்திருக்கலாம்.

இந்த விபத்தின் மூலம் ஒரு சமூகத்தின் எதிர்காலம் ஒன்றே குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்த காலங்களாக பல்வேறு கட்டங்களாக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த யாழ். மண்ணின் எதிர்காலம் இன்னும் இவ்வாறான கவனயீன செயற்பாடுகளால் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த சிறுமியின் உயிரிழப்பிற்கு வாகனத்தின் சாரதி மாத்திரமே பொறுப்பு என்று மட்டுப்படுத்திவிட முடியாது.

எத்தருணத்திலும் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுடையது என சத்தியப்பிரமாணம் செய்து உயிர் காக்கும் பொறுப்பை தனதாக்கிக்கொண்ட வைத்தியர்களையும் இதில் குற்றம் சாட்டுவது தகுந்தது.

குறித்த மாணவி விபத்தில் சிக்குண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளை, உரிய நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறுகின்றனர்.

குழந்தையை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில், அங்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லை என்றும் குழந்தைக்கு முதலுதவியேனும் வழங்கப்படவில்லை எனவும் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உயிர் காக்கும் உன்னத பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் மதிகெட்ட செயற்பாட்டின் வெளிப்பாடுதான் இது என்றால் அதற்கு யாராலும் மறுப்புக் கூற முடியாது.

இந்த இடத்தில் குழந்தையை கொலை செய்தது, வாகன சாரதியா? அல்லது வைத்தியர்களா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.

இவ்வாறு உயிர்க்காக்க வேண்டியவர்கள் தனது கடமையில் இருந்து தவறி செயற்படுவதற்கான காரணம் என்ன? பொறுப்பில் உள்ளவர்கள் யார்? பொறுப்புக்கூற போவது யார்? இதற்கு மாற்றுத்தீர்வு என்ன?

இதுபோன்றதான கேள்விகளுக்கு அடுத்தக்கட்ட பதில் மாகாணத்தின் வைத்தியத்துறைதான். மாகாணத்திற்கென ஒரு வைத்தியத்துறை, அதற்கும் ஒரு அமைச்சர், அதற்கும் ஒரு செயலாளர், அதன் கீழ் பல ஊழியர்கள், அதுமாத்திரமின்றி வைத்தியத்துறையை மேம்படுத்த பெருமளவான நிதிகள்.

இவ்வாறு அனைத்தும் இருந்தும்கூட சிறுமியின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளதெனில் அங்கு வைத்தியத்துறை எங்கணம் செயற்படுகின்றது.

இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய மாகாணத்தின் வைத்தியத்துறை அமைச்சர் என்ன பதில் கூற போகின்றார்.

கூறப்போனால் இந்த கொலைக்கு அவரும் ஒரு தனிப்பட்டகாரணமே, தனக்கு கீழ் செயற்படக்கூடிய ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மாகாண சுகாதார அமைச்சருடையது, ஒரு வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை இருப்பின் அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது, அல்லது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவரது கடமை.

ஆனால் வடமாகாண சுகாதாரத்துறை தனது பொறுப்பில் இருந்து தவறியுள்ளது, இது வடமாகாண சுகாதாரத்துறையின் மந்த கதியை காட்டுகின்றது.

அதாவது வடமாகாண சுகாதார அமைச்சரினுடைய பொறுப்பு இது. வெறுமனே வைத்தியசாலைக்கான கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், புதிய செயற்றிட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் இடுவதும், மாதாந்த கூட்டங்களில் மதிப்புறு உரைகள் ஆற்றுவது மாத்திரம் ஒரு அமைச்சரது பொறுப்பு அல்ல.

தனது அமைச்சுக்குக் கீழ் உள்ள துறையின் அனைத்து செயற்பாட்டுக்கும் அமைச்சரும் ஒரு பொறுப்பாளிதான், இந்நிலையில், இந்த விபத்தில் குழந்தை உயிரிழந்தமைக்கு அடுத்தகட்டமாக வடமாகாண அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்?

மக்கள் நலன் சார்ந்து அவர் செயற்படுவாரா? அல்லது பாராமுகமாய் வெறும் கண்டனங்களுடன் கடந்து செல்லப்போகின்றாரா?

அத்துடன், வடமாகாணத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட கல்வி அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலகியிருந்த நிலையில, அவர்களது இடத்திற்கு வினைத்திறனுடைய ஒருவரை அமைச்சராக நியமிக்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

எனினும் ஒரு வைத்தியசாலையில் உள்ள பற்றாக்குறைகளைக் கூட நிவரத்தி செய்யமுடியாத வினைத்திறனுடையவர்களுக்கு முதலமைச்சர் அமைச்சுப் பதவியைக் கொடுத்திருப்பது சற்றே கேளிக்கைக்குரியது.

இதனைத் தவிர்ந்து குழந்தையின் மரணத்தை வைத்துக்கூட அரசியல் செய்யலாம் என்ற இழிநிலையில் அரசியல்வாதிகள் இருப்பது மண்ணின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும்.

இதுவரைகாலமும் அப்பகுதியில், தாம் சார்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், சுயநலம் மறந்து தனது மக்களுக்கு தனது பணியை செய்துவந்திருந்தார்கள் எனில் இன்று இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

மாறாக இன்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் உயிரிழந்த குழந்தையின் இறுதிசடங்கில் அரசியல் செய்கின்றார்கள். தற்போது, குழந்தையின் சடலத்தை வைத்து அரசியல் பேசுகின்றார்கள், அடுத்து இதை வைத்து தேர்தல் பிரச்சாரங்கள் அரங்கேற்றுவார்கள்.

தேர்தல் முடிந்த பின்னர் பழையநிலைதான் மீண்டும், அனுதினம் ஒவ்வொரு விபத்துக்கள், அதற்கும் ஒவ்வொரு காரணங்கள், அடுத்த தேர்தல் வரும்வரை தனக்கென்ன என்று செல்லும் அரசியல்வாதிகள்.

உண்மையில் புங்குடுதீவில் நிகழ்ந்த இந்த கோர விபத்துக்கு அல்ல கொடூர கொலைக்கு பொறுப்பு, வாகன சாரதி, வைத்தியசாலையின் வைத்திய உத்தியோகத்தர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் குறித்த பகுதி சார்ந்த அரசியல் தலைவர்கள்....! இவர்களுள் யார் கொலையாளி?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு