எமது தனித்துவம் மதிக்கப்படாவிட்டால் ஏதுமில்லை: முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

ஆசிரியர் - Admin
எமது தனித்துவம் மதிக்கப்படாவிட்டால் ஏதுமில்லை: முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

இலங்கையின் தற்போதைய அரசை அதிகாரத்துக்கு கொண்டுவந்த இலங்கையின் வடகிழக்குத் தமிழ் மக்களை உண்மையாக இன்றைய மத்திய அரசாங்கம் மதிக்கின்றதென்றால் எமக்குரிய சுயாட்சியை சமடி மூலம் பெற்றுக்கொடுப்பதே இந் நாட்டின் மக்களிடையே நல்லிணக்கம் வரத் துணைபுரியும். 

நல்லிணக்கம் என்று கூறிவிட்டு எம்மை வலுவிழந்தவர்களாக ஆக்கி பெரும்பான்மையினரின் பேரினவாதத்தை எம்மீது கட்டவிழ்த்து விடுவது நல்லிணக்கத்திற்கு வழிகோலாது. சமாதானம் உருவானால்த்தான் வணிகமும் வாணிபமும் வளர்ச்சி பெறலாமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.மாநகரசபை பழைய வளாகத்தில் இன்று நடைபெற்றிருந்தது. 

நிகழ்வில் இலங்கை அரசின் மத்திய அமைச்சர்களான தயா கமகே,விஜயகலா மகேஸ்வரன்,இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீ.ஏ.நடராஜன் ,யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இணை ஸ்தாபகத் தலைவர் கோசல விக்கிரமநாயக்க உள்ளிட்ட பலர் பங்கெடுத்திருந்தனர். 

முதலமைச்சர் மத்திய அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் தனது உரையில் இன்று பலவிதமான பின்ணணிகளில் இருந்து வியாபாரிகள், தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் போன்றவர்கள் இந் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்துள்ளீர்கள். உங்களை வடமாகாணம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது. 

அதே நேரத்தில் எமது தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இராணுவம் எமது காணிகளை ஆக்கிரமித்துள்ளது. கடல்ப்படை எமது கரையோரங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்தம் உறவினர் எமது சுற்றுலா மையங்களையும் தெருவின் கடைக்கூடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். 

வேறு நிலங்களை மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். ஆக்கிரமிப்பு நீங்கினால்த்தான் எமது தனித்துவம் பேணப்படும். தனித்துவம் மலர்ந்தால் வணிகமும் வாணிபமும் தொழில் முயற்சிகளும் சாலச் சிறப்புறுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வானது முதலீட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள்,மற்றும் மாகாண நிர்வாகம்,அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைபெறுகின்ற ஒரு வர்த்தகச் சந்தையாகும்.

இம் முறை 9வது தடவையாக இடம்பெறவுள்ள இந்த வருடாந்த நிகழ்வு வட தீபகற்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை. நான் கடந்த ஓரிரு நாட்களாகசென்ற இடங்களில் எல்லாம் இவர்களின் பதாகைகளும் துண்டுப்பிரசுரங்களும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்தேன். 

இந்த வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 350 வரையான காட்சிக்கூடங்கள் இடம்பெறவிருக்கின்றன என அறியத்தரப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு காட்சிக் கூடமும் ரூபா எண்பதினாயிரம் வரையில் பணம் கட்டியே பெறப்பட்டதாக அறிந்தேன். உள்ர் வாசிகளுக்கு சில கழிவுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அறிந்தேன். 

இந்த நிகழ்வு வடக்கில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க விரும்புகின்ற நிறுவனங்களுக்கான ஒரு உள்நுழைவு நிகழ்வாக கருதப்படுகின்ற போதிலும் இவை தொடர்பில் வடமாகாணத்தின் இன்றைய நிலைமை பற்றியும் எமது அத்தியாவசிய தேவைகள் பற்றியும் இத் தருணத்தில் குறிப்பிட வேண்டியது வடமாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் எனது கடப்பாடாகவுள்ளது.

இன்றுசர்வதேச அளவில் இலங்கை ஒரு மத்திய வருவாயுடைய நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த குறியீட்டினுள் வடமாகாணம்மற்றும் கிழக்கு மாகாணங்களைவகைப்படுத்தப்பட முடியாதுள்ளது. நீண்டகாலப் போரினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள இப் பிரதேசங்கள் அடிப்படை மட்டத்திற்கும் மிகக் கீழேயே இருக்கின்றன. 

இவற்றை அடிப்படை மட்டத்திற்கேனும் கொண்டுவருவதற்கு விரைந்து செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு மத்திய அரசாங்கம், மாகாண அரசுகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள், முதலீட்டாளர்கள்,வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரைச்சார்ந்துள்ளது.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற வேளையில் மக்கள் விபரிக்க முடியாதஇன்னல்களை அனுபவித்த போதும் அவர்களின் கைகளில் தேவைகளுக்கு போதுமான பணம் இருந்தது. யுத்தம் முடிவுற்று இயல்பு நிலை திரும்பியதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். ஆனால் அது நீடித்து நிலைக்கவில்லை. 

பிறநாட்டுக் கம்பனிகளும் நிதி நிறுவனங்களும் சர்வதேச தரத்திலான வர்த்தக நிறுவனங்களின் உள் நுழைவும் இப் பகுதியில் உள்ள நிதி மற்றும் மூலதனங்களை முழுமையாகச் சுரண்டிச் சென்றுவிட்டன. 

நிதி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகள் எம்முட் பலரைக் கடனாளிகள் ஆக்கின. அவர்களின் மிகை வட்டி அறவீடுகளின் காரணமாக அனைத்துத் தர மக்களும் இன்று கடனாளிகளாக காணப்படுவதுடன் ஒரு சிலர் தமது இன்னுயிர்களையும் மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் மனதிற்கு வேதனையைத் தருகின்றன. 

இவ் விடயத்தை நான் யாரையுங் குறைகூறும் நோக்கில்கூறவில்லை. மாறாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்களை அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வதற்கு வர்த்தகப் பிரமுகர்களாகிய உங்களின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என்பதைக் கூறிவைக்கின்றேன். 

உங்கள் உற்பத்திகளையும் மற்றும் தொழில்நுட்ப திறமைகளையும் இங்கு காட்சிப்படுத்துவதற்கும் உங்கள் தரமான உற்பத்திகளை எமது மக்களுக்கு விற்பனை செய்வதற்கும் வருகை தந்துள்ளஉங்களை இன்முகம் காட்டி வரவேற்கின்ற இத் தருணத்தில் உங்களிடம் ஒரு அன்பான கோரிக்கையை விடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

வடமாகாண பூமியின்தட்ப, வெட்ப சூழ்நிலைகளைக் கருத்தில் எடுக்கும் போது இப் பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதேசாலச்சிறந்ததாகத் தென்படுகிறது. அத்துடன் இத் தீபகற்பம் ஒரு பாரம்பரிய முறையின் அடிப்படையிலான விவசாய பூமியாகவும், மீன்பிடி தொழிலுக்கேற்ற சூழலாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இங்கு ஆறுகளோ அன்றி நீர்வீழ்ச்சிகளோ இல்லை. மாறாக நிலத்தடி நீரை நம்பியே மக்கள் விவசாய முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. பாரிய அளவிலான தொழில் முயற்சிகள் எதனையும் இங்கு மேற்கொள்வது கடினமானது. பாரிய ஆலைகளையுந் தொழிற்சாலைகளையும் எமது மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதே எம் கருத்து. இங்கு வாழும் மக்கள் பாரம்பரிய தொழில் முறைகளில் தொடர்ந்தும் இருக்க விரும்புபவர்கள். 

ஆனால் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் நாட்டம் காட்டுபவர்களாக இருக்கின்றார்கள். கல்வியில் சிறந்து விளங்குகின்ற போதிலும் அவர்களின் தொழில் முயற்சிகள் சிறப்பாக அமையாத காரணத்தினால் சிலர் தவறான வழிகளில் சென்று வன்முறைகளில் ஈடுபடுவதை அவதானிக்கலாம். 

பிறரின் உடல், பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் சில இளைஞர்கள் மதிநுட்பத்துடன் நோக்கப்பட்டு அவர்கள் சரியான பாதையில் இட்டுச் செல்லப்பட வேண்டும். அவர்கள் தாமாகத்தான் இயங்குகின்றார்களா என்ற கேள்வி எம் மனதில் சதா எழுந்துகொண்டே இருக்கின்றது.

அதை விட இங்குள்ள இளைஞர்களுக்கு குறிப்பிட்ட ஒரு சில வீதத்தினரைத் தவிர ஏனையவர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்கள் கிட்டுவதில்லை. நிதி வசதிகள் உள்ள இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றார்கள். மிகுதியாக உள்ளவர்கள் தனியார் நிறுவனங்களிலோ அல்லது தொழில் முயற்சிகளிலோ ஈடுபடுவதற்கான தொழில் பயிற்றுவிப்பு நிலையங்கள் குறைந்திருக்கும் நிலையில் இவர்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாது காணப்படுகின்றார்கள். 

இப்பகுதிகளில் சிறிய, மத்தியதரத் தொழிற்சாலைகளையும் உற்பத்தி நிறுவனங்களையும் கூடுதலாக அமைக்கும் பட்சத்தில் இந்த இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். அவர்களின் வருவாய் மட்டமும் அதிகரிக்கும். இதன் மூலமாக இங்கு முதலீடு செய்ய விரும்புகின்ற நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் கூடிய நன்மைகளைப் பெறுவதுடன் இங்குள்ள மக்களின் வருவாய்களும் அதிகரிக்கப்படும். 

இங்குள்ள மக்களுக்கும் வர்த்தகப் பிரமுகர்களுக்கும் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் உதவக் கூடிய வகையில் நீங்கள் காட்டுகின்ற ஆர்வமும் அனுசரணையும் எம்மால் வரவேற்கப்படுகிறது. இக் கண்காட்சியில் டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருவாயை யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச் செயலால் இப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகள் மேம்படுத்தப்படுவன. மீள் முதலீடுகள் செய்வதன் மூலம் அவற்றின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களின் தொழில் முயற்சிகள் விரிவுபட உதவுகின்றது. உங்கள் இச் செயல் பாராட்டுக்குரியது. 

அண்மைக் காலமாக பொலித்தீன் பாவனை தடை பற்றி மிகப் பெரியளவில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் அவற்றுக்கிணையான மாற்று உபயோகப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றை சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்படாமை ஒரு பாரிய குறைபாடாகும். மாற்றீடாகத் தயாரிக்கப்படுகின்ற பொருட்களின் விலை மற்றும் பாவனைத் தரம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 

மிகக் குறைந்த விலையில் கிடைக்கப் பெற்ற பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக பலமடங்கு கூடிய விலையில் மாற்றீட்டுப் பொருளை உற்பத்தி செய்வது பிரயோசனம் அற்றது. எனினும் வாழையிலை, வாழை நார் போன்றவை இங்கு போதியளவில் கிடைப்பதால் தக்கதொரு மாற்றீடு விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எமது உற்பத்திகள் மற்றும் சந்தைப் படுத்தல்கள் மேம்படுத்தப் படுவதுடன் அவற்றின் பாவனைத் தரங்கள் உறுதிப்படுத்தப்படல் அவசியமாகும். 

இன்று இந்த வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டிருக்கின்ற அனைத்து உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், பொருட்கள் விற்பனையாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.அதே நேரம் உள்;ர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளும் இவ் வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவன என நம்புகின்றேன். 

உணவு சிற்றுண்டி வகைகளுக்கு பெயர் போன வடமாகாணத்தின் உணவுற்பத்தியாளர்களின் உணவுப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யப்படவும் யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது பாரம்பரியம், சூழல், சீதோண நிலை, கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான சகலதையும் உள்ளடக்கிய வியாபார நோக்கே எமது மக்களுக்குப் பயனளிக்கும் என்று நம்புகின்றேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு