ஹமில்ட்டன் கொலைச் சம்பவம்: சந்தேக நபரை சர்வதேச ரீதியில் தேடும் நடவடிக்கை தீவிரம்!
ஹமில்ட்டன் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், எதியோப்பியாவிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை சர்வதேச ரீதியில் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல்தர கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள ஹமில்ட்டனைச் சேர்ந்த இப்ராஹிம் ஈசக் ஹூசேன் என்பவரையே பொலிஸார், தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எதியோப்பியா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் ஏறிவிட்டதனை கனேடிய எல்லைப் பாதுகாவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். எனினும், அந்த வேளையில் குறித்த அந்த நபர் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை என ஹமில்ட்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் அவரை தேடும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படுவதாகவும், அவரைக் கைது செய்து ஒன்ராறியோவுக்குக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் ஹமில்ட்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோர்க் பௌலீவர்ட்டில் உள்ள பௌலீவர்ட் பில்லியர்ட்ஸ்ஸிற்கு வெளியே கடந்த 19ஆம் திகதி அதிகாலை 1:30 அளவில் இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.