துரத்தியடித்த யானைகள், சிதறியோடிய பொலிஸார்; அதிரடிப்படை தேடுதல்!

ஆசிரியர் - Editor2
துரத்தியடித்த யானைகள், சிதறியோடிய பொலிஸார்; அதிரடிப்படை தேடுதல்!

இலங்கையின் ஊவா மாகாணம் கதிர்காமம் பகுதியில் காட்டு யானைகள் பொலிஸ் உறுப்பினர்களை விரட்டியமையால், கையில் வைத்திருந்த ஆயுதத்தை எறிந்துவிட்டு ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 17ஆம் நாள் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று லுணுகம்வெஹர காட்டுப் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இரகசிய இடம் ஒன்றை சுற்றிவளைக்க சென்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 அளவில் கஞ்சா பயிரிடப்பட்டிருக்கும் இடத்தை குறித்த பொலிஸ் குழு அடைந்துள்ளது. அதன்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக பொலிஸாரை துரத்தித்துரத்தி தாக்கியுள்ளது.

இதனால் பதறித் துடித்த பொலிஸ் குழு தம்மைத் தற்காத்துக்கொள்ள நாலு பக்கமும் சிதறியோடியுள்ளது. இந்த ஓட்டத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T56 ரக துப்பாக்கியும் கீழே விழுந்துள்ளது. பின்னர் துப்பாக்கியைத் தேடியபோதும் அது எங்கேயும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கியைத் தேடும் பணிகளில் விசேட அதிரடிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.