மைத்திரிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, கொழும்பு வார இதழொன்றிற்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் தனித்து ஆட்சியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் விடயங்கள் யாவும் வெறும் பிரசாரங்களே என குறிப்பிட்டுள்ள சமிந்த விஜேசிறி, இவற்றை செயற்படுத்த முயற்சித்தால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் அரசியல் குற்றப் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார்.
குறித்த பிரேரணைக்;கு ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றால் தனித்து ஆட்சியமைக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் ஆதரவு கிடைக்குமென நம்புவதாகவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ஐ.தே.க.வின் உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமளிதுமளிக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் ஐ.தே.க.விற்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள பொருளாதாரம் தொடர்பான அமைச்சை இவ்வருடம் முதல் தான் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விடயங்கள் யாவும், ஐ.தே.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து ஆட்சியமைக்கும் முனைப்பிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன் பின்னணியிலேயே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.