எழுக தமிழ் - ஜனநாயக போராளிகள் ஆதரவு!
எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தாயக மீட்புக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் முனைப்பு மௌனிக்கப்பட்டதின் பின்னர் மிகவும் கேள்விக்குரியதான இடர்பாடுகள் நிறைந்த 10 ஆண்டுகளை ஈழத் தமிழினம் கடந்து நிற்கிறது.
தமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாத ஓர் வரட்டு மனோபாவத்தில் சிங்களம் தனது தேவைகளின் மீதான கரிசனையில் கடந்த 5 தசாப்தங்கள் எப்படிப் பயணித்ததோ அந்தப் போக்கிலிருந்து சற்றும் சளைக்காமல் தீவிரமாக பயணிப்பதை தெற்கு அரசியலின் சமகால நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இடருற்ற எமது மக்களின் வாழ்வியல் போக்கில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்ற அவாவுடன் தமிழர் நிலங்களின் மீளமைப்பு மற்றும் மீள் கட்டுமானப் பணிகளின் தேவை கருதியதான அடிப்படை அபிவிருத்தி இலக்குகளையேனும் நாம் எட்டியிருக்கின்றோமா என்ற இயலாமை கலந்த கேள்வி எம்மை ஆட்கொண்டுள்ளது.
காணாமற் போனோர் பற்றிய நம்பகரமான வெளிப்பாடுகளின்றியும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான உறுதிப்பாடுகளின்றியும், இடருற்ற மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கரிசனைகள் ஏதுமன்றியும், போரின் போது விழுப்புண்களை தாங்கிய போராளிகளின் எதிர்காலம் சம்பந்தமான தீர்க்கமான உறுதிப்பாடுகளின்றி ஈழத் தமிழினம் இடையனற்ற மந்தையைப் போல் வீதிக்கு வந்து நிற்கிறது.
இப்படியான மிகவும் சலனத்திற்குரியதும் இடர்பாடுகள் மிகுந்த திருப்பு முனையில் ஈழத் தமிழினம் பயணிக்குமொரு சூழலில் தமிழ் அரசியற்பரப்பின் வகிபங்காளர்களின் ஏகோபித்த செயற்பாடொன்றின் மூலமே ஈழத் தமிழினம் எதிர்கொண்டுள்ள தற்கால சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்று ஜனநாயகப் போராளிகள் தீர்க்கமாக நம்புகின்றனர்.
இதனடிப்படையில் குறுகிய கால அரசியல் இலக்குகளுக்கு அப்பால் தமிழர் அபிலாசைகளை மனதில் இருத்தி அனைத்து அரசியல் தரப்புக்களும் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டிய அவசியத்தை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.
ஈழத் தமிழினத்தின் தற்போதைய கோரிக்கைகளுக்கு ‘எழுக தமிழ்’ பேரெழுச்சியானது ஜனநாயக ரீதியான மக்கள் அரசியற் போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பதை உறுதிப்படுத்தவும் தமிழினத்தின் உரிமைகள் சார்ந்து காரியமாற்றும் அனைத்து அரசியற் கட்சிகள், அமைப்புக்கள், தாயக மக்கள் அனைவரையும் ‘எழுக தமிழ்’ பேரணியில் இணைந்து கொள்ளுமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும். திலீபன் கனவு பலிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.