SuperTopAds

கனடா இந்து ஆலயத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமை!! உண்மையில் நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
கனடா இந்து ஆலயத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமை!! உண்மையில் நடந்தது என்ன?

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி இருவர் கனடிய ஊடகம் ஒன்றுக்கு புகாரளித்துள்ளனர்.

ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் இக்கட்டான வாழ்க்கை சூழலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்து , இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்க முடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலை சுற்றும்" என குருசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை

தேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியை செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.

இவர்கள் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்த போது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாகவும் மிரட்டியதாக குருசாமி கூறியுள்ளார்.

தகாத சொற்களைப் பயன்படுத்தி திட்டியதாக குருசாமி குறிப்பிட்டுள்ளார். எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்காததால் நாங்கள் அழுது கொண்டிருந்தோம்.

ஐந்து மாதங்கள் நாங்கள் அங்கு வேலை செய்திருக்கிறம் என்று மாசிலாமணி கூறியுள்ளார். முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும் என்று கூறியுள்ளார்.

அடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலை செய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள் தான் அதிகம் கவலை தருவனவாக இருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்

பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜ குருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் மறுத்து விட்டது.

ஆனால், அதன் மத ரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை," அத்துடன் "கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்திற்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை அணுகுவதற்காகவும்," தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

"கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மத ரீதியான சிற்ப வேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை, புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

"தொழிலாளர்கள் எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜக் குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது நவீன உலகின் அடிமைத்தனமாகும் என்று தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது.

முடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்பு கொண்டார்.

"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்," என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவர் கூறுகையில்,

நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது."

சாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலை செய்த போதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.

அந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.

வாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம் பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.

ஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது.

நான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம் திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வார காலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.

தங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.

ஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், "அந்தச் செய்திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பி வருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்," கூறியுள்ளது.

குருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் கவலை தருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரியார் ஆலயத்தை ஒரு "வர்த்தகம்" போல இயக்குகிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு

சிவாச்சாரியார் தியாகராஜக் குருக்கள் மேலான புலன் விசாரணை, BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012ல் தியாகராஜக் குருக்கள் பெற்றிருக்கின்றார்.

"முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிபாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டு வருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன் இது ஒரு சுரண்டல்,'' என்கிறார்

கோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை "பாரதூரமான குற்றச்சாட்டுகளாக" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

"என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார்.

ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது," என்கிறார்.

நகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன் விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.

இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்து கொள்ளும் போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப் போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது என அவர் கூறினார். இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது.

பனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி

Parkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.

எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்று குறித்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி John No கூறியுள்ளார்.

தற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலை வழங்குநருடன் மட்டுமே வேலை செய்யலாம்.

கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலை வழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது.

அதனால், வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலை வழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன என்று John No குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக John No கூறியுள்ளார்.

இது பனிப்பாறையின் முனை என்று தான் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார். அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்.