SuperTopAds

சிரியாவில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்!

ஆசிரியர் - Admin
சிரியாவில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்!

சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசு படை வான்வழி தாக்குதல் நடத்துவதில் ஷாய்ரத் விமானப்படை தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இங்கு உள்ள கிடங்கு ஒன்றில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆயுதக்கிடங்கில் இருக்கும் காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் ராணுவ அதிகாரிகள் 12 வீரர்கள் உடல் சிதறி பலியான நிலையில்,  பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். சக வீரர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிரிய ராணுவம் ரசாயன தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி ஷாய்ரத் விமானப்படை தளம் மீது அமெரிக்க படை அதிரடி வான்தாக்குதல் நடத்தியதில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.