சரவணபவன் எம்.பி.யின் படம் போடுவார்கள். அதனால் வீதி போட வேண்டாம்.. அம்பலமான தமிழரசு உட்கட்சி குத்துவெட்டு..!
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் வரும் கல்வியங்காடு - சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள வீதி இதுவரை புனரமைக்கப்படாமைக்காக காரணம் தமிழரசுக் கட்சியினருக்கு இடையே நிலவும் உட்கட்சிப் பூசல் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீதியில் தமிழரசுக் கட்சி மூத்த அரசியல்வாதியும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் வீடு உட்பட பல வீடுகள் உள்ளன.
இந்நிலையில் கள்வியங்காட்டில் குச்சொழுங்கைகள் முதல் அனைத்து வீதிகளும் போடப்பட்டபோதும் குறிப்பிட்ட இந்த வீதி மட்டும் போடப்படாமல் மோசமான நிலையில் உள்ளது.
இதற்குக் காணரம் தமிழரசுக் கட்சிக்குள் உள்ள உட்கட்சி முரண்பாடே எனக் குற்றஞ்சாட்டுகிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன்.
இந்த வீதியைப் கம்பரெலியா திட்டத்தின் கீழ் புனரமைத்தால் அந்த வீதியில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் இந்தப்பகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் படம் போட்ட அறிவிப்பு பலகை வைப்பார்கள்.
அதை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சீ.வி.கே. விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவே அந்த வீதி புனரமைப்புக்குத் தடையாக உள்ளது எனவும் பார்த்தீபன் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் படம் இருக்கலாம். ஆனால் தனது சொந்தக் கட்சி எம்.பியின் பெயர் இருக்கக் கூடாது என நினைக்கும் நிலைமை உள்ளது.
இவ்வாறு சிறிய விடயத்தில் கூட பிரிந்து நிற்கும் இவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை ஒன்றுபட்டுப் பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது எனவும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.