SuperTopAds

யானைகள் பிடுங்கியெறிந்த பயிர்களுடன் ஊர்வலமாக சென்ற கிளிநொச்சி மக்கள்!

ஆசிரியர் - Admin
யானைகள் பிடுங்கியெறிந்த பயிர்களுடன் ஊர்வலமாக சென்ற கிளிநொச்சி மக்கள்!

காட்டு யானைகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி, கண்டாவளை ரங்கன் குடியிருப்பு மக்கள் இன்று கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள், பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை கூறியதுடன், அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்றனர்.

காட்டு யானைகளால் அழிவுக்குள்ளான பயிர்களை ஏந்திக் கொண்டு சென்ற மக்கள் தங்களது கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்கியிருந்தனர்.

குடியிருப்புக்களுக்குள் காட்டு யானைகள் தொடர்ந்தும் உள்நுழைந்து பயிர்களை அழித்து வருவதோடு, வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அண்மைய நாட்களில் தினமும் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது. எனவே, யானைகள் கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் மின்சார வேலிகள் அமைத்து உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, உடனடியாக செய்ய வேண்டிய தீர்வு, நிரந்தர தீர்வு குறித்து மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளாருடன் கலந்து ஆலோசித்துள்ளதாகவும், முதற்கட்ட நடவடிக்கையாக கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு எல்லைகளில் யானைகள் கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களுடன் பொதுமக்களும் இணைந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிரந்தரத் தீர்வாக மின்சார வேலி அமைத்தல் பணி குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்த அவர், கல்மடுநகர் தொடக்கம் இரணைமடு வரை குறித்த வேலி அமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.