பொறுப்புடன் செயற்படுங்கள்..! காரைநகா் பிரதேசசபை தவிசாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
பொறுப்புடன் செயற்படுங்கள்..! காரைநகா் பிரதேசசபை தவிசாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

காரைநகர் கசூரினா சுற்றுலா மையத்தில் வடக்கு மாகாண சபையின் நிதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை தனியாருக்கு வழங்கியமை தொடர்பாக வடக்கு மகாண பிரதம செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் வாழ்வாதார செயற்றிட்டங்களின் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்று கடுமையாக எச்சரித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காரைநகரில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு காரைநகர் சசூரினா சுற்றுலா மையத்தில் வடக்கு மாகாண சபையின் 11.43 மில்லியன் ரூபா நிதியில் மேற்படி பாரம்பரிய உணவம் அமைக்கப்பட்டது.

.இந்த உணவகத்தை காரைநகர் பிரதேச சபை காரைநகரில் உள்ள தனியார் ஒருவருக்கு வழங்கியது எனவும் பின்னர் அவர் யாழ்.நகரில் இயங்கும் கொஷி ரெஸ்ரோறன்ஸ் எனப்படும் ஹொட்டல் உரிமையாளருக்கு வழங்கினார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு முறையான சுகாதார விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 

அரச நிதியில் அமைக்கப்பட்ட உணவகத்தை தனியார் ஹொட்டலுக்கு வழங்கியமை தவறு எனவும் சுட்டிக்காட்டிய காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார், ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, காரைநபர் பிரதேச சபைத் தவிசாளர், செயலாளர், கொஷி ரெஸ்ரோறன்ஸ் உரிமையாளர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

கொஷி ரெஸ்ரோறன்ஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன், இந்த விடயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலையிட முடியாது எனவும், வழக்குகளைப் போட்டுக்கொண்டிருப்பதே அவருக்கு வேலை எனவும் வாதாடினார்.

எனினும், குறித்த உணவகத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி சென்றபோது அங்கு சுகாதார விதிமுறை மீறப்பட்டிருந்தமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிவான், மேற்படி உணவக விடயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலையிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறினார். உணவக உரிமையாளரை இந்த வழக்கில் இருந்து நீதிமன்று விடுவித்தது.

மேற்படி உணவகத்தில் பணியாற்ற காரைநகரில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைக் கண்டறிய முடியவில்லை எனவும் அங்கு பணியாற்ற யாரும் தயாராக இல்லை எனவும் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

அவரது கருத்தை நீதிமன்று ஏற்றுக்கொள்ளாத நீதிமன்று, காரைநகர் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு காரைநகர் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டது.

மேலும், வடக்கு மாகாண சபையின் நிதியில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை தனியாருக்கு வழங்க முடியுமா என்பது தொடர்பாக வடக்கு மகாண பிரதம செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டது.

அடுத்த வழக்கு விசாரணை ஜீலை 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு