இலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட வவுனியாவின் காணி மோசடிகள்!

ஆசிரியர் - Admin
இலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட வவுனியாவின் காணி மோசடிகள்!

வவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த இடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் காணியற்றவர்களாக பலவருடங்கள் காத்திருக்கின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் வவுனியா மாவட்டத்தில் ஒரு போதும் வசித்திராத பிரதேச செயலாளரின் உறவினர்களிற்கும் (திருகோணமலை) அவர்தம் நன்பர்களுக்கும் (மன்னார்)காணி வழங்கப்பட்டுள்ளது.

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் சரத்துக்களை அப்பட்டமாக மீறி சுமார் 72 ஏக்கர் அளவிலான காணித்துண்டுகள் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மடுக்குளம் பன்றிக்கெய்தகுளம் இராமனூர்புளியங்குளத்தின் ஒரு பகுதி அலியாமருதமடுக்குளம் என சுமார் பத்து கிராமங்களில் 620ற்கும் மேற்பட்ட காணிதுண்டுகள் உறவினர்கள் நன்பர்கள் பெயர்களில் பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக சுமார் 80காணித்துண்டுகளுக்கான பெயர்விபரங்களில் பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படடிருந்தது. அத்துடன் குறித்த பெயர்விபரங்களின் வாக்காளர் பதிவு மாவட்டங்களும் தேர்தல் திணைக்களத்தின் தரவுத்தளதினூடாக பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.(திருகோணமலை, மன்னார்)

தமிழ் கிராமங்களின் நடுவில் பெருந்தொகையான காணிகளை கையகப்படுத்தி இருப்பதன் உள்நோக்கம் வவுனியாவின் தமிழ் ஆர்வலர்களால் ஊடகங்களில் கடந்தகாலங்களில் வெளியிடப்பட்டிருந்தது. குடிஅடர்த்தி குறைவாக உள்ள வவுனியா கிராமங்களை இனங்கண்டு இவ் பாரிய காணிகளை குறித்த ஒரு குழுவினூடாக கையகப்படுத்தி பின்பு உறுதிமாற்றம் பெற்றதும்(ஒருவருடத்தில்) குறித்த பிரதேசத்தை சாராத இனத்தவரை குடியேற்றி தமிழரின் இனப்பரம்பலை மண்ணோடு சேர்த்து புதைப்பதே நோக்கம் என வவுனியாவின் புத்திஜீவிகள் பலரும் ஊகத்தை வெளியிட்டிருந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு பம்பைமடு என்கின்ற பூர்வீக தமிழ் கிராமம் இவ்வாறான நடவடிக்கை மூலம் தமிழரின் இனப்பரம்பல் இரண்டாம் இடமாக்காப்பட்டது யாவரும் அறிந்ததே. பம்பைமடுவில் இன்றுவரை தினமும் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த முஸ்லீம் மக்களின் குடியிருப்பை சுற்றியுள்ள காடுகளும் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் புதிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவிரைவில் வவுனியாவின் பூர்வீகக் கிராமங்களில் தமிழர் இனப்பரம்பல் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம்.

ஆதாரபூர்வமாக அனைத்து ஆதாரங்களும் கையளிக்கப்பட்டும் குறித்த பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை. அதேநேரம் குறித்த ஆதாரங்கள் தவறானவை என்றோ போலியானவையென்றோ அரச அதிபரினால் தெரிவிக்கப்படவில்லை. ஏனைய கிராமங்களின் காணி மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிவருவதை தடுக்கும் நோக்குடனேயே அரசஅதிபர் உட்பட முக்கிய அதிகாரிகள் செயற்படுவதாக மக்கள் அங்கலாய்கின்றனர்.

ஏனைய கிராமங்களின் காணி மோசடி தொடர்பான ஆவணங்களை அழிப்பதிலே பிரதேச செயலாளர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதுடன் அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது அரச அதிபர் துணை நிற்பது வவுனியாவின் அவலம் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வன்னி மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செல்வாக்கும் பெருந்தொகை பணமுமே பிரதேச செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பவர்களின் கைகளை கட்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு