SuperTopAds

உளவியல் ரீதியான துன்புறுத்தலை உண்டாக்கும் தரப்படுத்தலுக்கு தடை..!

ஆசிரியர் - Editor I
உளவியல் ரீதியான துன்புறுத்தலை உண்டாக்கும் தரப்படுத்தலுக்கு தடை..!

க.பொ.த சாதாரணதரம் மற்றும் 5ம் வகுப்பு புலமைப் பாிசில் பரீட்சைகளில் சித்தியடைந்திருந்தால் சித்தி என மட்டுமே குறிப்பிடப்படும். அதற்குமேல் தரப்படுத்தல் எதனையும் செய்வதில்லை என கல்வியமைச்சு தீா்மானித்துள்ளது. 

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதாவது, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தனிப்பட்ட ரீதியில் 

மாணவர்கள் பெற்றுக் கொண்ட அகில இலங்கை நிலைகள் பற்றிய விபரங்கள் இனி வெளியிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சித்தியடைந்திருந்தால் சித்தி என்பதை குறிப்பிடும் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.மாணவர்களிடையே அதிக போட்டித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், 

இலங்கையில் பரீட்சைகள் நடத்தப்படுவதையும் குறைத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயமானது உண்மையில் இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் விதத்தில் அமையும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இலங்கையில் கல்வி தொடர்பில் ஓர் போட்டி நிலைமை காணப்படுகிறது. இந்த போட்டியானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மையமாக வைத்து முதலில் ஆரம்பமாகிறது.எனவே மாணவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே 

அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். விளையாட்டு, மகிழ்ச்சி என்பவற்றை மறந்து அவர்கள் முழுமையாக கல்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.இந்த நிலையில் அவர்கள் பரீட்சைக்கு சிறப்பாக முகங்கொடுத்தாலும் 

கூட பரீட்சை பெறுபேறுகள் மற்றும் மாணவர்களின் தரப்படுத்தல்கள் என்பன மீள முடியாத உளத்தாக்கங்கள் பலவற்றையும் ஏற்படுத்துகின்றன என கல்வியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.