SuperTopAds

தமிழா்களுக்கு துரோகமிழைத்துவிட்டாா் ஜனாதிபதி..! சீறினாா் ரவிகரன்..VIDEO

ஆசிரியர் - Editor I

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி, அந்த தமிழர்களின் பூர்வீக குளத்தையும் அதன் கீழுள்ள 

தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களையும் சிங்கள மக்களுக்கு அபகரித்துக் கொடுத்ததன் மூலம், ஜனாதிபதி அந்தக் காணிகளுக்கு உரிமையான தமிழ் மக்களுக்கு துரோகமிழைததுவிட்டதாக 

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார். கடந்த 08.06.2019 அன்று நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற நிலையில், 

அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன கலந்துகொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்ததுடன், மறுசீரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக நிறுவப்பட்ட கட்டடங்கள், 

குளங்கள் என்பவற்றை திறந்துவைத்தும் இருந்தார். அந்த வகையில் வெலி ஓயா என்று தற்போது அழைக்கப்படும் தமிழர்களின் தொன்நிலப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக குளத்தை ஜனாதிபதியவர்கள் கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு 

திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார்.  ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்சிக்குள்ளாகியிருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது. என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட 

அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த நியைில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள், மகாவலி (எல்) என்ற போர்வையிலே 1950,1960,1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் 

வழங்கப்பட்டிருந்த நிலையில் உள்ள இந்தக் காணிகள், தற்போது அபகரிக்கப்பட்ட நிலையில் உள்ளதைப் பலதடவைகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் காணிகளில் 1948ஆம் ஆண்டிற்கு முன்னைய காலப்பகுதி 

ஆவணங்கள் கூட ஒருசிலர் தற்போதும் வைத்துள்ளனர். இந்த நிலையில் காலங்காலமாக தமது வாழ்வாதாரத்தைப் பாவித்து வந்த இந்த நிலங்களை விட்டு 1984ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக 

எங்களுடைய மக்கள் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். வெளியேற்றப்பட்ட பின்பு அங்கு சிங்கள மக்கள் 

படிப்படியாக குடியேற்றப்பட்டுவந்த நிலையில் அதாவது, இந்த குடியிருப்புக்காணிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் குடியேற்றப்பட்ட நிலையிலும், கொக்குளாய் முகத்துவாரப் பகுதியிலும் 

குடியேற்றப்பட்ட நிலையிலும் இன்றுவரை எங்களுடைய மக்கள் காணிகளுக்காக அலைந்துகொண்டிருக்கும் நிலைகளை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இந்தக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், பல நீர்ப்பாசனக் காணிகளும் ஏனைய காணிகளுமாக, மயில்குளம் என்று சொலலக்கூடிய எங்களுடைய இடத்தில், 

தற்போது மொனற வெவ என்று அந்த இடத்தினை குறிப்பிடுவார்கள் அந்த இடத்தில்வைத்து, முன்னைய அரசுத் தலைவர் அவர்களினுடைய ஒப்பத்துடன் காணி அனுமதிப்பத்திரங்கள் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலைகளை பல தடவைகள் பலரும் நாங்கள் சுட்டிக்காட்டிவந்திருக்கின்றோம். அரசாங்கக் கொள்கைகளில் ஒன்று, காணிக் கட்டளைச் சட்டத்தின்படி ஒருகாணிக்கு இரண்டு 

ஆவணங்கள் இருந்தால் காலத்தால் எது முந்தைய ஆவணமோ அந்த ஆவணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுமென, அரசாங்கத்தினுடைய காணிக் கட்டளைச் சட்டத்தின்படி உள்ளது.

ஆனால் இவைகள் எல்லாம், அதாவது காணிக் கட்டளைச் சட்டமாக இருக்கட்டும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளாக இருக்கட்டும் எல்லாவற்றினையும் புறந்தள்ளி தமிழ் மக்களினுடைய காணிகளை 

அபகரித்துச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, வெலி ஓயா பிரதேசம் என்ற பெயரில் எங்களுடய மணலாற்றுப் பூமியை பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்று குடியேற்றம் செய்யப்பட்ட ஒரு பிரதேசப் பிரிவாக இருக்கின்றது.

இந்த விடயங்களுடன் காணிகளில், ஒருபகுதிக் காணிவிடயமாகத்தான் இன்று நான் கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளேன். எங்களுடைய பூர்வீக நிலங்கள், எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தினை காப்பாற்றிய நிலங்களானவற்றில், 

ஒரு பகுதி அமையன் குளம் என்ற அதனோடு சேர்ந்திருந்த நிலங்கள், அதில் அன்று 360ஏக்கர் நிலத்திற்குரிய பயனாளிகளுடைய பெயர்கள், பயனாளிகளுடைய உறவினர்களுடைய பெயர்கள் உட்பட என்னிடம் இங்கே ஆவணங்கள் உள்ளன.

கந்தர் - வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை - தியாகராசா, துரைச்சாமி - துரைராசலங்கம், முத்தையா - தங்கராசா, தம்பிஐயா - கனகையா உள்ளிட்ட 63பேருடைய பெயர்கள் அவர்களுடைய ஏக்கர் அளவுகள், என ஆவணங்கள் உள்ளன.

அதேபோல், அடையக்கறுத்தான் காணியில் நல்லதம்பி - முருகுப்பிள்ளை, வேலுப்பிள்ளை - சிவக்கொழுந்து, பூ.கந்தையா, செல்லப்பு இராசேந்திரம் உள்ளிட்டவர்களுடைய 45பயனாளிகளுடைய பெயர்விபரம் 

மற்றும் ஏக்கர் விபரம் எல்லாம் எங்களிடம் இருக்கின்றது. எங்களிடம் மட்டுமல்ல இது அரசாங்கத் திணைக்களங்கள் அதாவது, சம்பந்தப்பட்ட பகுதியினரிடமும் இந்த விபரங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 25ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின்படியும், 

மாவட்ட செயலக புள்ளி விபரங்களின்படியும் 2919 ஏக்கர் 625 பயனாளிகளுக்குரிய காணிகள் இந்த அபகரிப்புக்குள் இந்தக் காணிகளும் உள்ளடங்குகின்றன என்ற அறிக்கை தரப்ட்டிருக்கின்றது. அந்த அறிக்கையும் என்னிடம் இருக்கின்றது.

இந்த வகையிலே தற்போது அரசுத் தலைவர் அவர்கள், கடந்த 08.06.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அபிவிருத்தி என்ற வகையிலே இங்கு வருகைதந்து சில அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தியதாக 

எல்லா இடமும் விளம்பரப்படுத்தப்பட்டது. அதில் ஒரு நடவடிக்கையாக இந்த ஆமையன் குளம் பகுதிக்குச் சென்று கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு ஏற்கனவே தமிழ் மக்களால் காலங்காலமாக பாவிக்கப்பட்டுவந்த 

அந்தக் குளத்தோடு சேர்ந்த காணிகள் னைத்துக்குமான அந்தக் குளம் மறுசீரமைக்கப்பட்டு, இப்போது குடியேற்றவாசிகளாக இருக்கின்ற அந்தச் சிங்கள மக்களுக்காக அந்தக் குளத்தினைத் திறந்து வைத்துள்ளார் அரச தலைவர் அவர்கள்.

இதில் 103மில்லியன் உரூபாய்க்குமேல் செலவிட்டு அந்தக் குளம் மறுசிரமைக்கப்பட்டுள்ளது. 900ஏக்கர் நிலங்களுக்கு நீர்பாய்ச்சக்கூடிய வகையிலே அந்தக் குளம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதில் என்னவெனில் எங்களுடைய மக்கள் காலங்காலமாக 1948ஆம் ஆண்டிற்கு முந்திய காலப்பகுதியிலிருந்து, பாவித்துவந்த இந்த நிலங்கள், 1984ஐம் ஐண்டு எங்களுடைய மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்பு 

அபகரிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு இன்று இவ்வளவு செலவில் அந்தக் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து அவர்களுடைய கைகளிலேயே வழங்கப்ட்டிருப்பது என்பது மிகப்பபெரியதொரு துரோகமாகும். 

எங்களுடைய தமிழ் மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகம் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன். சிறுபான்மை இன மக்களுடைய வாக்குகளில் ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டிருப்பதைப் பலதடவைகள் ஜனாதிபதியவர்கள் சொல்லியிருக்கின்றார்.

இருந்தும் அந்த மக்களுக்கன பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம் என்ற ஒரு நிலையிலும், அவர்களுடைய காணிகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கான வழிகளை செய்யவேண்டும் 

என்ற கருத்துக்கள் கூட பின்னைய காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பூர்வீகமாகவிருந்த காணிகளுக்க்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், அடுத்த ஒரு இனத்திற்கு அபகரித்து வழங்கப்பட்டிருக்கின்றதும், 

காணிக் கட்டளைச் சட்டங்களை மீறியிருப்பதும், மிகவும் துரோகமாகும் என்பதைக் கூறுகின்றேன். எங்களுடைய மக்கள் இன்று தங்களுடைய இந்தப் பிரச்சினைகளை அதாவது, தங்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையிலே 

எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, தாங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு நாதியற்றவர்களாக அந்த மக்கள் காணப்படுகிறார்கள் என்பதை இதனூடாக தெரிவித்துக்கொள்கின்றேன்.