SuperTopAds

சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்

ஆசிரியர் - Admin
சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்

சஹ்ரான் வன்முறை அடிப்படைவாதத்தின் பக்கம் சென்றதால், அவரைக் கைது செய்வதற்கு, 2018ஆம் ஆண்டு பகிரங்க பிடியாணையைப் பெற்றுக் கொண்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி.சில்வா தெரிவித்தார்.     

சஹ்ரானின் சமூக ஊடகங்கள் மற்றும் அவருடைய இணையத்தளங்களை 2017ஆம் ஆண்டு முதல் தீவிரமாகக் கண்காணித்து வந்தது, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் அவருடைய பதிவுகள் இருந்து வந்தன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே அவரைக் கைது செய்வதற்கு நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையைப் பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜராகி சாட்சியமளிக்கும்போதே முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க.டி.சில்வா இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்ததால் பல விடயங்கள் நினைவில் இல்லையெனவும் அவர் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார். சஹ்ரான் பற்றி விசாரணை செய்ய 2016, 2017 காலப் பகுதியில் திட்டமிட்டோம். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் எல்.ரி.ரி.ஈயினர், டயஸ்போரா மற்றும் அடிப்படைவாத பிரிவினர் என மூன்று அம்சங்களாக பிரித்து விடயங்களைக் கண்காணித்து வந்தோம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை அனுப்புவோம். அந்த அறிக்கையில் சஹ்ரான் பற்றிய முழுமையான தகவல்களையும் குறிப்பிட்டிருந்தோம். விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு பொலிஸ மா அதிபர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வீடியோக்களை சஹ்ரான் பகிர்ந்திருந்தால் அதனை நாம் நேரடியாக பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்புவோம். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தமையால் அவருக்கு சகலவற்றையும் தெரியப்படுத்தியுள்ளோம்.

சஹ்ரானின் வீடியோக்கள் தமிழ் மொழியில் இருந்தால் அவற்றைக் கண்காணிப்பதற்கு இரண்டு குழுவை நியமித்திருந்தேன். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவை மறுசீரமைக்கும்போது இக்குழுக்களை நியமித்தேன். அவருடைய செயற்பாடுகள் வன்முறையைக் கொண்ட அடிப்படைவாதத்தின் பக்கம் செல்வதை புரிந்துகொள்ள முடிந்தது. அவர் பதிவேற்றிய வீடியோக்களை நான் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளேன். திகன சம்பவத்தின் பின்னர் அவருடைய சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் அதிகரித்து விட்டன.

அவரைக் கைது செய்து முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கே பிடியாணை பெற்றிருந்தேன். சஹ்ரான் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தமையால் இன்டர்போலிடம் நீல எச்சரிக்கையை அனுப்பியிருந்தோம் என்றார்.

சஹ்ரான் பற்றிய விசாரணைகளை இடைநிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் தனக்கு எந்தவிதமான ஆணையையும் பிறப்பித்திருக்கவில்லையென்றும் அவர் மேலும் கூறினார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சக்கர நாற்காலியிலிருந்தவாறே அவர் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.