ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாத்துக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க விசேட பொலிஸ் குழு!

ஆசிரியர் - Admin
ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாத்துக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க விசேட பொலிஸ் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

இந்த குழுவிடம் இன்று முதல் யூன் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் முறைப்பாடுகளை பதிவுசெய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாஷீம் உட்பட சில தற்கொலை தாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாத் பதியூதீன் ஆகியோர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் வகித்த பதவிகளையும் உடனடியாக பறிக்க வேண்டும் என்று தென் இலங்கையில் மாத்திரமன்றி வடக்கு கிழக்கிலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து நேற்றைய தினம் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து அசாத் சாலியும், கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஹிஸ்புல்லாவும் விலகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ரிசாட் பதியூதீனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவி விலகினர்.

இந்த நிலையிலேயே பொலிஸ் தலைமையகத்தின் உயர்நிலை அதிகாரிகள் மூவர் தலைமையில் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிசாத் பதியூதீன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கான விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்கள் மூவர் தொடர்பான முறைபாடுகளைப் பெற்றுக்கொள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்ட்டுள்ளது. இன்று முதல் எதிர் வரும் 12ஆம் திகதி வரையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு