SuperTopAds

ரத்தன தேரரை அடுத்து உண்ணாவிரதத்தில் குதிப்பேன்! - மட்டு. விகாராதிபதி எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
ரத்தன தேரரை அடுத்து உண்ணாவிரதத்தில் குதிப்பேன்! - மட்டு. விகாராதிபதி எச்சரிக்கை

அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிடின் அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதத்தை நிறுத்தும்போது நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி ஸ்ரீ அம்பிட்டிய சுமணரட்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் நேற்று முன்னெடுத்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமணரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

'அதுரவிய ரத்தின தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்தமை பெரும் மகிழ்ச்சியை அளிப்பதோடு இதுதான் ஒற்றுமைக்கான ஒர் அடையாளமாகும். ஒரு நாட்டுக்கு பிரச்சினை வரும்போது அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். இந்த செய்தியைதான் சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

அதுரலிய ரத்தின தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதம் அரசியல் ரீதியானவையோ இன மத ரீதியானவையோ அல்ல. முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு எதிரானதாகும்.ஆகவே அடிப்படை வாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட் பதியுதின் ஆகியோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும்.

இத்தகைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினாலேயே அனைத்து இனங்களும் வாழ்வதற்கு கூட நாடொன்று இல்லாமல் போகும் நிலமை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி, பிரதமர், ஏனைய மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் இல்லாவிடின்அதுரலிய ரத்தன தேரர் உண்ணா விரதத்தை நிறுத்தும்போது நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டியேற்படும்” என சுமணரட்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.