தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் ஜனாதிபதி!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தனக்கு முன்னர் அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் குறித்து அப்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவித்தும், தாக்குதல் குறித்த தகவல்கள் புலனாய்வு மீளாய்வுக்குழுவில் முன்வைக்கப்பட்டும் பாதுகாப்பு பிரதானியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார் என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு பிரதானி ஆகியோரிடம் கேள்வி எழுப்பினர்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று முதல் தடவையாக கூடியது. நேற்றைய விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் பிரதி சபாநாயகர் நேற்று குழுவிற்கு வராத நிலையில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையில் உறுப்பினர்களான நளிந்த ஜயதிஸ்ஸ, ஆசு மாரசிங்க, சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, ரவூப் ஹகீம் ஆகியோரும் தெரிவுக்குழுவின் செயலாளர் டிகிரி ஜயதிலக மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு பிரதானி இருவரிடமும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பினர். கடந்த கால செயற்பாடுகள், பாதுகாப்புக் குழுக்கூட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய புலனாய்வுத் துறையின் கடந்த கால செயற்பாடுகள் என்ற பல விடயங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். எனினும் தகவல்கள் சரியாக பரிமாறப்படவில்லை. பாதுகாப்பு குழுக்கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை.
பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் தகவல்கள் அறிவிக்கப்பட்டும் அவர்கள் தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் தேசிய புலனாய்வுத்துறைக்கும் ஏனைய பாதுகாப்பு துறைக்கும் இடையில் முறையான தொடர்பு இருக்கவில்லை என்ற பலவீனங்களை பாதுகாப்புச் செயலாளர், புலனாய்வு பிரதானி இருவரும் விசாரணைகுழு முன்னிலையில் தெரிவித்தனர்.
தெரிவுக்குழுவில் இருந்த உறுப்பினர்களான நலிந்த ஜயதிஸ்ஸ, ஆசு மாரசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இருவரிடமும், பாதுகாப்பு குழுக்கூட்டங்களில், வாராந்த மீளாய்வுக்குழுக் கூட்டங்களில், ஏனைய கூட்டங்களில் எல்லாம் நீங்கள் காரணிகளை கூறிய போதிலும் பாதுகாப்பு பிரதானியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி என்ன செய்துகொண்டிருந்தார். வேடிக்கை பார்த்தாரா. மிகவும் மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற இதுவா காரணம். அப்படியென்றால் இந்த கூட்டங்கள் எதற்காக நடத்தப்படுகின்றன என விரக்தியுடன் கேள்வி எழுப்பினர். எனினும் அதிகாரிகள் இருவரும் மௌனமாக இருந்தனர்.
நேற்று விசாரணைகளை பொதுமக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையில் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதற்கமைய ஆரம்பம் தொடக்கம் சிறிது நேரம் இந்த விசாரணைகள் ஒளிபரப்பப்பட்ட போதிலும் இடை நடுவே நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் பாராளுமன்ற சிறப்புரிமை தடுக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டினர்.
ஆகவே இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் செயற்குழுவை தலைமை தாங்கிய கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன் அடுத்த அமர்வுகளின்போது நேரடி ஒளிபரப்பை வழங்க சகல நடவடிக் கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என செயலாளர் டிகிரி ஜயதில கவிடம் அவர் குறிப்பிட்டார்.