இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபை கூடாதது பாரிய தவறு!- மகிந்த

தேசிய பாதுகாப்புச் சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும் இதுகுறித்து வெகுவாக ஆர்வம் காட்டவில்லை. அனைத்தும் மிகச் சுலபமாகக் கிடைத்து விட்டமையே இதற்குப் பிரதான காரணம் ஆகும். அதேபோன்று இத்தகைய சூழ்நிலைகள் பற்றிய போதிய தெளிவின்மையும் காரணமாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சபை சுமார் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பது நகைப்பிற்குரியதாக இருக்கின்றது. நான் ஜனாதிபதி இருந்த காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை தேசிய பாதுகாப்புச் சபை கூடுவது வழக்கமாகக் காணப்பட்டது. அதனாலேயே யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரவும் முடிந்தது.
அக்கூட்டத்தில் யுத்தத்தின் அவ்வப்போதைய நிலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கினார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் எனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெற்றது. இவ்வாறு இரண்டு மாதங்கள் வரையில் பாதுகாப்புச்சபை கூடவில்லை என்பது பெரும் தவறாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.