அப்பாவிகளை துன்புறுத்தாதீர்கள்! - பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சம்பந்தன் கோரிக்கை

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம். பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கைது செய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களை இனங்கண்டு கைதுசெய்யுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நேரில் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இதில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கலந்து கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் உண்டு.
தங்களின் கூட்டு முயற்சியால் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களும், அதன் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த நடவடிக்கையின்போது அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள். பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம். பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் ஆகியோரை இனங்கண்டு கைதுசெய்யுங்கள் என்றார்.