SuperTopAds

சாதி சண்டையால் கண்ணகிக்கு திருவிழா இல்லை..! சாதியை துாக்கி பிடித்து சாக்கடைகள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
சாதி சண்டையால் கண்ணகிக்கு திருவிழா இல்லை..! சாதியை துாக்கி பிடித்து சாக்கடைகள் அட்டகாசம்..

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த வருடம் 

குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது தாழ்ந்த சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பைக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இதனால் இந்த வருட திருவிழா சம்பந்தமாக தென்மராட்சி பிரதேச செயலர் குறித்த ஆலய அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். 

ஆனால் அதனையும் மீறி நேற்று திங்கட்கிழமை (20)  ஆரம்பமாகவிருந்த வருடாந்த உற்சவம் ஒருதரப்பினால் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் இன்று மதியம் 

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஆலயத்தில் அனைவருக்கும் சமவுரிமை வேண்டும் சாதிப்பாகுபாடு பார்க்கக்கூடாது, 

கடந்த வருடம் இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாது அதற்கான தீர்வு என்ன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிரதேச செயலர் இந்த ஆலய பிரச்சினையை தம்மால் தீர்க்க முடியாதுள்ளமையால் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் ஏழாந்திருவிழாவினை எமது சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் செய்கின்றோம். 

ஆனால் இந்த முறை திருவிழா செய்வதானால் நாம் சுவாமி தூக்கக்கூடாது என்று கூறினார்கள் இதற்கு நாம் உடன்படவில்லை இதனால் நேற்று தொடங்க  வேண்டிய வருடாந்த திருவிழாவையே நிறுத்திவிட்டார்கள் எனத் தெரிவித்தனர். 

தென்மராட்சியில் மீண்டும் சாதிப்பிரிவினையால் ஆலய திருவிழா நிறுத்தப்பட்டுள்ளமை தமிழருக்கே தலைகுனிவு என கல்வியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.