உச்ச பாதுகாப்புடன் ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா..
ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் திருவிழா இன்று அதிகாலை ஆரம்பமாகியுள்ளது.
இன்று அதிகாலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து முப்படை பாதுகாப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாடுகளுக்கு
அமைவாக பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. பொங்கல் நிகழ்வுக்கு செல்லும் அனைத்து பக்தர்களும்
இராணுவத்தின் முழுமையான உடல் பரிசோதனைகளின் பின்னர் ஆலய சுற்றுவளாகத்துக்குள் செல்ல அனுமதிக்க படுகின்றார்கள்.
கடந்த 13ஆம் திகதி உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு தீர்த்தம் எடுக்கும் வைபவம் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் இடம்பெற்றது.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில்
தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் சென்று அங்கு உப்புநீரில் விளக்கு எரிக்கப்படுவதோடு நேற்று வரை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்றைய தினம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்றது.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு
ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறுவது வழமையாக காணப்படுகின்றது.
அந்தவகையில் இன்று அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு
மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.