செய்யாத குற்றத்துக்காக 6 மாதங்களாக சிறையில் இருந்து முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!
மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் (கதிர்காமத்தம்பி ராஜகுமாரன்) இன்று விடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஹ்ரானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவில், தாங்களே பொலிஸாரை கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பிணையில் விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார். அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கையளிக்கப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.