நாவற்குழி ஆட்கொணா்வு மனு..! மேஜா் ஜெனரல் துமிந்த ஹெப்பட்டி வலானவை நீதிமன்றில் ஆஜராக யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு..
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ அதிகாாிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞா்கள் தொடா்பிலான ஆட்கொணா்வு மனுக்கள் மீது இராணுவ அதிகாாிகள் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் முன்வைத்த ஆட்சேபனைகள் அனைத்தும் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கா் நிராகாித்துள்ளதுடன்,
மனுதாரா்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளாா்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து,
மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்தார். மனுதாரர்கள் அனைவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வரும் மே 24ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிட்ட மேல் நீதிமன்றம்,
அன்றைய தினம் வழக்கின் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை நீதிவான் வழங்குவார் என்று குறிப்பிட்டது. 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் கட்டளைக்காக இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் முன்னிலையானார்.
முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார். அவருடன் அரச சட்டவாதி மாதினி விக்கேஸ்வரனும் முன்னிலையானார். 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் ஆரம்பிக்கப்படுள்ளன.
சட்டமா அதிபரின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் பூர்வாங்க ஆட்சேபனைகள் மற்றும் விண்ணப்பங்கள் செய்வதிலும் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள், 1996ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதியன்று நாவற்குழி மறவன்புலவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது காணாமல் ஆக்கப்பட்ட கணேசலிங்கம் கிருபாகரன், ஸ்ரான்லி ஜீவா, பொன்னம்பலம் கண்ணதாசன் ஆகியோர் தொடர்பில்
குறிப்பிட்டு, அவர்களை நீதிமன்றின் முன் கொண்டுவர எதிர்மனுதாரர்களை பணிக்கும் ஆட்கொணர்வு எழுத்தாணை மனுக்களின் ஊடாக உறவினர்கள் கோரியுள்ளனர். இந்த ஆட்கொணர்வு எழுத்தாணை விண்ணப்பங்கள் தொடர்பில் எதிர்மனுதாரர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி தோன்றி பூர்வாங்க ஆட்சேபனைகள் பலவற்றை முன்வைத்துள்ளார்.
முக்கியமாக மனுதாரரின் எழுத்தாணை விண்ணப்பமானது 21 வருடங்கள் கடந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்து, மனுதாரர்கள் காலதாமதம் என்ற தவறினை இழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர்மனுதாரர்களால் பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து அவை தொடர்பில்
இந்த மன்று கட்டளை ஆக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்தமை காரணமாக உணர்வுபூர்வமான இந்த மனுக்களின் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பில் மனுதாரர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் காலதாமதம் என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்பட முடியாதது என்றும்,
ஆட்கொணர்வு எழுத்தாணை என்ற விடயத்தில் காலவரையறை எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனுக்கள் தற்றுணிவு நிவாரணமாக கொள்ளப்பட முடியாதது என்றும், உரிமை சார் நிவாரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்மனுதாரர்களினால் முன்வைக்கப்பட்ட ஏனைய ஆட்சேபனைகள் தொழில்நுட்ப ரீதியானவை எனக் கூறப்பட்டு
ஆட்கொணர்வு எழுத்தாணை விடயத்தில் தொழில் நுட்ப ரீதியிலான ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என விவாதிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் தொடர்பிலான கணேசலிங்கம் கிருபாகரன்,ஸ்ரான்லி ஜீவா, பொன்னம்பலம் கண்ணதாசன் ஆகியோர் 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று பிடிக்கப்பட்டுள்ளார். இவை தொடர்பில் மனுதாரரினால் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
1996 ஜூலை 20ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி அன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விண்ணப்பம் செய்த 2017 நவம்பர் 15ஆம் திகதியன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்ற விடயமானது ஒரு தொடர் நிகழ்வாக 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியில் இருந்து இற்றைவரை தொடர்வதாக இந்த மன்று வெளிப்படுத்துகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக உள்ள நிலையில், அங்கே காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்த மன்று வெளிப்படுத்துகின்றது.
வடமாகாண மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. நாவற்குழி இராணுவ முகாமானது வடமாகாணத்தில் அமைந்திருந்த நிலையில், வடமாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் நியாயாதிக்கம் இருப்பதாக இந்த மன்று கொள்கின்றது. எனவே எதிர்மனுதாரர்கள் தரப்பில் மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட ஆட்சேபனை பொருளற்றதாகின்றது.
மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வெறும் பிரதிகளாக இருப்பது தொடர்பில் பிரதி மன்றாடியார் அதிபதியால் பலத்த ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற விதி 46 இன் பிரகாரம் ஒழுகவில்லை என்றவாறாக ஆட்சேபிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களினால் ஆவணங்களின் மூல பிரதிகள் சமர்ப்பிக்கப்படாதமை தொடர்பிலான விளக்கங்களின்பாலும் மன்று கவனம் செலுத்தி
குருதி உறவு ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான தவிர்க்கப்பட முடியாத எழுத்தாணை விண்ணப்பம் ஒன்று, உள்ள சூழ்நிலைகளுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும்பொழுது மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்படாதமை காரணமாக மட்டும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மன்று ஏற்க மறுக்கின்றது.
எனவே எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கமைவாக அர்த்தமற்றவை – தேவையற்றவை – வழக்கு விடயத்தை இறுதியாக தீர்மானிக்க தோதற்றவை என கொண்டு அவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன.
குடிமகன் ஒருவரின் ஆட்கொணர்வு எழுத்தாணை தொடர்பிலான மனு இந்த வழக்குகளில் கவனிக்கப்பட்டது போல எதிர்மனுதாரர்களினால் கவனிக்கப்படுவது முற்றிலும் தவறானது என இந்த மன்று வெளிப்படுத்துகின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து,
மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாக இந்த மன்றினால் கருதமுடியாதுள்ளமை குறிப்பிடப்படுகின்றது. இந்த வழியே மனுதாரர்களினால் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனை என்ற வகையில் ஏறக்குறைய 2 வருடங்கள் செலவளிக்கப்பட்டமை பெருத்தளவில் கண்டிக்கப்படுகின்றது.
இந்த அளவில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில், உள் நிகழ்வுகளை முழுமையாக பரிசீலித்து, மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு தரப்பினர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த மன்று வெளிப்படுத்தி இக்கட்டளையை ஆக்குகின்றது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கள் கட்டளையை வழங்கினார்.