பள்ளிவாசல்களை அவமதிக்கிறாா்களாம் படையினா்..!
தேடுதல் நடவடிக்கைகளின்போது பள்ளிவாசல்களை அவமதிக்கும் வகையில் பாதுகாப்பு படையினா் நடந்து கொள்வதாக யாழ்.ஐந்துசந்தி பொிய மாஹதீன் ஜிம்மா பள்ளிவாசல் நிா்வாகி ஷரபுல் அனாம் கூறியுள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து சந்திப் பகுதியில் சோதனை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிஸாரும் காலணிகளுடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர்.
சோதனைக்கு வந்த சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரிடம் காலணிகளைக் கழற்றிவிட்டுச் சென்று சோதனைகளை மேற்கொள்ளுங்கள் என்று பல தடவை கோரினோம்.
ஆனால் அவர்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. காலணிகளுடன் உள்ளே சென்றார்கள். பள்ளிவாசல்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
எமது மனங்கள் புண்படும்வகையில் பேசினார்கள் என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார். கடந்த ஈஸ்ரர் தினத்தன்று நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்திருந்தன.
அந்தத் தாக்குதலுக்கு முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவொன்று உரிமை கோரியிருந்தது. தாக்குதலை அடுத்து நாட்டில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தேடப்பட்டுக் கைது செய்யப்படும் அதேவேளை சாதாரண முஸ்லிம் மக்கள் இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின்போது பல்வேறு துன்பங்களை
எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்று பல தரப்பினரால் சுட்டிக் காட்டப்படுகின்றது. அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் பாதுகாப்புத் தரப்பினர்
அவர்களுடன் கடுமையான முறையில் நடந்துகொள்கின்றனர். கடுந்தொனியில், அவமதிக்கும் வகையில் பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொள்கின்றனர்,
அன்றாடம் அச்சத்துடனேயே வாழ்கின்றோம் என்றும், தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளைக் கூடக் கொண்டு நகர்த்த முடியாது கையறு நிலையில் உள்ளோம் என்றும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
வடக்கிலும் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் தம்மை அச்சுறுத்தும் வகையிலும்,
அடக்கி ஒடுக்கும் வகையிலும் செயற்படுகின்றனர் என்று முஸ்லிம் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு
மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் தற்போது தனித்து விடப்பட்டதாக உணர்கின்றனர். பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் சாதாரண மக்களைக் குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கு வேதனை தருகின்றது என்று முஸ்லிம் மக்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.