இலங்கையின் குற்றச்சாட்டுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் பதிலடி!
கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் தமது அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் இன்று அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இரு மசூதிகள் தாக்கப்பட்டன. இதற்கு பதிலடி வழங்கும் வகையிலேயே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார். இராஜாங்க அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே நியூசிலாந்து பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமையை உறுதிபடுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.