SuperTopAds

எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் - காரைநகர் மக்கள் மன்றாட்டம்!

ஆசிரியர் - Admin
எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் - காரைநகர் மக்கள் மன்றாட்டம்!

எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். 

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை காரணமாக வரட்சி ஏற்பட்டுள்ளது. தீவகப் பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது.

நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர் பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்நிலையிலேயே மக்கள் தமக்கு குடிநீரினை வழங்குமாறு மன்றாடி கேட்டுள்ளனர். அது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 

நாங்கள் உயிர் வாழ்வதற்கு குடிநீரை தாருங்கள். அபிவிருத்தியை விட்டுவிட்டு, குடிக்க குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுங்கள். இதுவரை காலமும் பிரதேச சபை , காரைநகர் அபிவிருத்தி சபை , எப்.ரி. எனும் அமைப்பு ஆகியன குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டன. 

வலி.தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியுடன், பெரியவிளான் பகுதியில் இருந்தே குடிநீர் பெறப்பட்டு எமக்கு விநியோகிக்கப்பட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் இருந்து பெருமளவான நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதனால் அப்பகுதி நீர் நிலைகள் உவர் நீராக மாறிவருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து அங்கிருந்து நீர் எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதனாலையே குடிநீரினைப் பெற முடியாத நிலையில் உள்ளோம் என காரைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை குடிநீர் தடைப்பட்டது தொடர்பில் வலி.தென் மேற்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அதில் , காரைநகர் பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் , சண்டிலிப்பாய் உதவி பிரதேச செயலாளர் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது , அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்ச படுவதனால் , எமது பிரதேச நன்னீர் நிலைகள் உவர் நீராக மாறி வருகின்றது. அதனாலையே எமது பிரதேசத்தில் இருந்து நீரினை உறிஞ்சுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.  

காரைநகர் மக்களுக்கு குடிநீர் பெற வேறு வழிகள் இல்லை, வளங்கள் இல்லை எனில் எமது பிரதேசத்தில் இருந்து குடிநீரை பெறுவதற்கு மனிதாபிமான ரீதியில் அதற்கு சம்மதிக்க முடியும் என வலி.தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் தெரிவித்தார்.